வைஃபை ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராம் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சமீப நாட்களாக நடத்திவரும் ஆய்வுக் கூட்டங்கள் சிலவற்றின் புகைப்படங்களை அனுப்பியது.
அவற்றைப் பார்த்துவிட்டு
வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு பற்றிய விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. விருதுநகர் பாலியல் வன்கொடுமை, பெரிய அளவில் பிடிபடும் கஞ்சா போன்றவை எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளன.
இதுமட்டுமல்லாமல் ஒன்றிய அரசின் உளவுத்துறையும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு குறித்து சிறப்பு ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக தமிழக அரசுக்கும் தகவல்கள் சென்றுள்ளன.
இந்தப் பின்னணியில்தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் முதல்வரின் நம்பிக்கைக்குரிய அதிகாரியான டிஜிபி சைலேந்திரபாபு தமிழகம் முழுவதும் காவல்துறை கட்டமைப்பின் படி ஒவ்வொரு மண்டலத்திலும் ஒவ்வொரு சரகத்திலும் சென்று ஆய்வுக் கூட்டங்களை நடத்திவருகிறார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியபோது தொடங்கிய இந்த ஆய்வுக் கூட்டம் தென் மண்டலம், வடக்கு மண்டலம் என தொடர்கிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் சில சரகங்கள் இருக்கும். ஒவ்வொரு சரகத்தின் கீழும் சில மாவட்ட காவல் துறை அமைப்புகள் இருக்கும். இந்த வகையில் ஒவ்வொரு சரகமாக தானே நேரில் செல்லும் டிஜிபி சைலேந்திரபாபு, அந்தச் சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களின் எஸ்.பி.க்கள் உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டங்களை நடத்துகிறார்.
இந்த ஆய்வு கூட்டங்களில் டிஜிபி சைலேந்திரபாபு அதிக கவலையோடு அதிக அக்கறையோடு குறிப்பிட்டுச் சொல்லும் விஷயம் கஞ்சா தான்.
‘சில பத்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நமக்கு அதாவது போலீசாருக்கு பெரும் தலைவலியாக இருந்தது கள்ளச்சாராயம். தமிழகம் முழுவதும் பல்வேறு வகைகளில் நடவடிக்கை எடுத்து கிட்டத்தட்ட கள்ளச்சாராயத்தை நாம் ஒழித்து முடித்துள்ளோம். ஆனால் அந்த சாதனையை உணர்ந்து பெருமைப்பட முடியாத அளவுக்கு இப்போது தமிழகம் முழுவதிலும் கள்ளச்சாராயம் இருந்த இடத்தில் கஞ்சா இருப்பதாக தெரிகிறது.
கள்ளச்சாராயம் குடித்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடும் விகிதத்தோடு ஒப்பிட்டால், கஞ்சா பயன்படுத்துபவர்களின் குற்றச்செயல் விகிதம் அதிகமாகவே இருக்கிறது. ஏனென்றால் கஞ்சா பயன்படுத்துபவன் என்ன நினைக்கிறானோ அதை செய்து முடிக்கும் அளவுக்கு அந்த வெறி அவனைத் தூண்டுகிறது. இதனால் கஞ்சா என்ற போதைப் பொருள் மூலம் குற்றம் அதிகமாக நடக்க வாய்ப்புள்ளது.
எனவே எந்தவித பாரபட்சமும் இல்லாமல் கஞ்சா புழக்கத்தை நாம் முற்றிலுமாக தடுக்க வேண்டும். நமது போலீஸ் துறையிலேயே சிலர் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக ஆதாரத்துடன் தகவல் இருந்தால் மிகக் கடுமையாக நடவடிக்கை எடுங்கள். கஞ்சா சட்டம் ஒழுங்கை மட்டுமல்ல சமூக ஒழுங்கையும் அடுத்த தலைமுறையையும் சேர்த்து கெடுத்துவிடும்.
இனி எங்கேயாவது அதிக அளவு கஞ்சா பிடிபட்டால் அந்த லிமிட் சார்ந்த போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரித்துள்ளார் டிஜிபி.
இதேபோல தமிழகத்துக்குள் எங்கிருந்தெல்லாம் கஞ்சா வருகிறது என்ற நெட்வொர்க்கையும் தேடிப்பிடித்து அழிக்க மேல் அதிகாரிகளிடமும் வலியுறுத்தியுளளார் டிஜிபி.
கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் கஞ்சா வேட்டையை போலீசார் சிறப்பு கவனம் எடுத்து நடத்தினார்கள். இப்போது கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில் தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் கஞ்சா வேட்டையை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் பிடிபட்டு வருகின்றன” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்..