கேரள ஏடிஎம்-களில் கொள்ளையடித்துவிட்டு தமிழகம் தப்பி வந்த கொள்ளையர்களை பிடித்த நாமக்கல் போலீஸ் டீமை, டிஜிபி சங்கர் ஜிவால் இன்று (அக்டோபர் 2) நேரில் சந்தித்து பாராட்டி வெகுமதி அளித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி அதிகாலை கேரள மாநிலம் திருச்சூரில் கொள்ளையடித்துவிட்டு கண்டெய்னர் லாரியில் வந்த கொள்ளைக் கும்பலை நாமக்கல் போலீசார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிடித்தனர். போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் கொள்ளையன் ஒருவர் உயிரிழந்தார். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மற்ற ஐந்து கொள்ளையர்களிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது… ஹரியானா – ராஜஸ்தான் பார்டரில் உள்ள ஹாவாட் பகுதியை சேர்ந்தவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபடுவதாகவும், 45-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் அங்கு இருப்பதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
மேலும், ஒரு கொள்ளை கும்பலில் ஏழு பேர் இருக்கிறார்கள். இவர்களில் இரண்டு பேர் டிரைவர்களாகவும் மற்ற ஐந்து பேர் கொள்ளையடிப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திரைப்படக்காட்சிகளுக்கு சற்றும் குறைவில்லாத இந்த சேஸிங்கில் கொள்ளையர்களை மிகவும் துணிச்சலாக பிடித்த நாமக்கல் போலீஸ் டீமை டிஜிபி சங்கர் ஜிவால் இன்று நேரில் சந்தித்து பாராட்டி வெகுமதி அளித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை விமானம் மூலம் சங்கர் ஜிவால் சேலம் சென்றார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக நாமக்கல் சென்று, எஸ்.பி அலுவலகத்தில் நாமக்கல் எஸ்.பி ராஜேஷ் கண்ணா, டிஐஜி உமா மற்றும் டிஎஸ்பி முதல் ஏட்டு வரை உள்ள 25 போலீசாரை பாராட்டினார். மேலும், டிஎஸ்பி. எஸ்.பி-க்கு ரூ.50 ஆயிரமும் மற்ற போலீசாருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரமும் வெகுமதி அளித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஈரான் செல்ல வேண்டாம் : இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை எச்சரிக்கை!