தனியாக வசிக்கும் முதியோர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று காவலர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
முதியோர்கள் தனியாக இருக்கும் வீட்டை குறிவைத்து கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடப்பது வழக்கமாகியுள்ளது. முதியோர்களால் சண்டையிட்டு திருடர்களை விரட்ட இயலாது என்பதால் கொள்ளையர்கள் வயதானவர்கள் தனியாக இருக்கும் வீட்டை தேர்வு செய்கிறார்கள்.
கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் மயக்க மருந்து தடவிய ரூபாய் நோட்டை கொடுத்த 4 பேர் கொண்ட கும்பல் 7 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் காவலர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். “60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், 55 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் என மாநிலம் முழுவதும் உள்ள முதியோர்களின் தகவல்களை காவலர்கள் திரட்ட வேண்டும். அந்த தகவலின் அடிப்படையில் தனியாக வசிக்கும் முதியோர்களின் விபரங்கள், தொடர்பு எண்கள், உறவினர்களின் விபரங்களை சேகரித்து, ஆவணங்களை பராமரிக்க வேண்டும்.

குறிப்பாக முதியோர்கள் நேரிலோ அல்லது ஆன்லைன் வாயிலாகவோ புகார் அளித்தால் அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். புகார் அளிக்கும் முதியோர்களின் வீடுகளுக்கே சென்று விசாரிக்க வேண்டும்.
அவர்கள் அளிக்கும் புகார் மனுக்களின் உண்மைத்தன்மைக்கு ஏற்ப விசாரணையை விரைந்து முடித்து தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மொத்தத்தில், தனியாக வசிக்கும் முதியோர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.
விடுமுறை நாட்கள் தவிர்த்து அனைத்து நாட்களும் பொதுமக்கள் காவல் நிலையங்களில் மனு அளிக்கலாம் என்று சங்கர் ஜிவால் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், முதியோர்களின் மனுக்களை வீடுகளுக்கே சென்று விசாரிக்க வேண்டும் என்ற அவரது புதிய உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மோனிஷா
திருவண்ணாமலை: கிரிவலம் செல்ல உகந்த நேரமும் சிறப்புப் பேருந்துகளும்!
