ரவுடிகளுடன் தொடர்பு : வழக்கறிஞர்களின் பட்டியலை கேட்கும் டிஜிபி!

Published On:

| By Kavi

சென்னை புழல், மதுரை, கோவை, பாளையங்கோட்டை, சேலம், வேலூர், கடலூர், திருச்சி ஆகிய மத்திய சிறைகளில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதில் முக்கிய ரவுடிகளாக கருதப்படும் 84 ரவுடிகளை 396 வழக்கறிஞர்கள் 1,987 முறை, 2024 ஜனவரி 1 முதல் ஜூலை 20ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் சந்தித்துள்ளனர்.

உதாரணமாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய 15 ரவுடிகளை இந்த காலக்கட்டத்தில் 546 முறை வழக்கறிஞர்கள் சந்தித்துள்ளனர்.

இதில், வழக்கறிஞர் தங்களது வழக்காடிகளை (client) உண்மையான முறையில் வழக்கு சம்பந்தமாக சந்தித்தாலும், சில வழக்கறிஞர்கள் சிறையில் உள்ள ரவுடிகளை சதித்திட்டம் தீட்டுவதற்காகவும், தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா, செல்போன் போன்ற பல்வேறு பொருட்களை கொடுப்பதற்காக சென்று சந்தித்து வருவதாக காவல்துறை தலைமைக்கு தெரியவந்துள்ளது.

இந்நிலையில், டிஜிபி சங்கர் ஜிவால், மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள்,  சரக டிஐஜிக்கள் மற்றும் மண்டல ஐஜிக்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை கடந்த அக்டோபர் 14ஆம் தேதி அனுப்பினார்.

அந்த சுற்றறிக்கையில், “ குற்றவாளிகளுடன் நெருங்கிய உறவை பேணுவதற்கும் பல்வேறு குற்றங்களில் ஈடுபடுவதற்கும், குறிப்பாக சிவில் தகராறுகள் மற்றும் சொத்துகளை ஆக்கிரமிப்பு செய்ய போலி ஆவணங்களை தயாரித்து அதிக லாபத்துக்கு விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கும் சில வழக்கறிஞர்கள் தங்களது தொழிலை தவறாக பயன்படுத்துகின்றனர்.

தமிழ்நாடு சிறை சட்டப்பிரிவு  541(3)ன் படி, எவரேனும் கைதியின் சட்ட ஆலோசகர் என்ற தகுதியில் தண்டனை பெற்ற மற்றும் பெறப்படாத கிரிமினல் கைதியுடன் நேர்காணல் செய்ய விரும்பினால், அவர் தனது பெயர் உள்ளிட்ட விவரங்களை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க வேண்டும்.

அவர் சிவில் வழக்கறிஞரா, கிரிமினல் வழக்கறிஞரா… என்ன சட்ட தொழிலை சார்ந்தவர் என்பதையும், அவர் சந்திக்கப்போகும் கைதியின் நேர்மையான சட்ட ஆலோசகர் தானா என்பதையும் சிறை கண்காணிப்பாளர்களிடம் உறுதி செய்ய வேண்டும்.

அந்த வழக்கறிஞரை சிறை கண்காணிப்பாளர் அவரது அடையாளத்தை உரிய முறையில் சரிபார்த்த பிறகுதான் அனுமதிக்க வேண்டும். இருப்பினும் தற்போது நேர்மையான சட்ட வழக்கறிகஞர்களை தவிர பல வழக்கறிஞர்கள் கைதிகளை சந்தித்து வருகிறார்கள்.

சிறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து அவர்களின் செயல்பாடுகளை கண்காணித்தால் இதுபோன்ற குறைபாடுகளை சரி செய்யலாம்.

எந்தவொரு குற்றத்திலும் வழக்கறிஞர்களின் ஈடுபாடு கண்டறியப்பட்டால் பிஎன்எஸ் u/ s 111 (6 & 7) சட்டத்தின் படி, அந்த வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்படலாம். மேலும், அந்த குற்றம் உறுதி செய்யப்பட்டால் BNSS சட்டப்பிரிவு 107ன் படி அவரது சொத்துகளை வழக்கில் இணைக்க நடவடிக்கை எடுக்கலாம்.

அந்தந்த மாவட்ட மாநகரங்களில் கிரிமினல்களுடன் தொடர்பில் உள்ள வழக்கறிஞர்கள் மற்றும் சிறையில் உள்ள கைதிகளை தொடர்ந்து சந்திக்கக்கூடிய வழக்கறிஞர்களின் பட்டியல்கள் மற்றும் அவர்களது நடவடிக்கைகளைப் பற்றி ரிப்போர்ட்டை அக்டோபர் 17ஆம் தேதிக்குள் அவசரமாக அனுப்பி வைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

டிஜிபியின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டுவதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில்,  சிறையில் கைதிகளை சந்திக்கும் வழக்கறிஞர்கள் சதியில் ஈடுபடுவதாகக் கூறி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: எடப்பாடி முதல் கமல் வரை… ஆளுநருக்கு வலுக்கும் கண்டனம்!

விநாயகர் சிலை வைத்த விசிக – விசித்திர சர்ச்சை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share