விமர்சனம்: டெவில்!

Published On:

| By Kavi

Devil Movie Review

கடவுளைக் காணச் செய்யும் சாத்தான்!

ஒரு திரைப்படத்தைக் காண வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுவது எது? அதில் இருக்கும் நடிகர், நடிகைகள் என்பதுவே நமது முதல் பதிலாக இருக்கும். அதன்பிறகு இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் தொடங்கி இதர சிறப்பம்சங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக அணிவகுக்கும். ஒவ்வொரு ரசிகருக்கும் இந்த வரிசை மாறுபடும். வழக்கத்திற்கு மாறான சில விஷயங்கள் இடம்பெறுவதும் கூட, ஒரு திரைப்படத்திற்குத் தனிக்கவனத்தைப் பெற்றுத் தரும். அப்படித்தான் ‘டெவில்’ படமும் ஈர்ப்பைத் தந்தது. இயக்குனர் மிஷ்கின் இதற்கு இசையமைத்துள்ளார் என்பதே அதன் பின்னிருந்த காரணம். அவரது சகோதரர் ஆதித்யா இப்படத்தின் எழுத்தாக்கம் மற்றும் இயக்கத்தைக் கையாண்டுள்ளார்.

இந்த படம் எப்படி இருக்கிறது?

ஹேமா (பூர்ணா) சாலையில் கார் ஓட்டிச் செல்லும்போது, எதிரே பைக்கில் வரும் அருண் (த்ரிகுன்) மீது மோதி விடுகிறார். அருணுக்கு ஏற்பட்ட காயம் குணமடைவதற்குள் இருவருக்குமிடையே நல்லதொரு புரிதல் ஏற்படுகிறது.

இளம் வயது ஆணும் பெண்ணும் அடிக்கடி நட்புடன் சந்திக்கும்போது, அது காதலாக மாறுவதுதானே அடுத்தகட்டமாக இருக்கும். நமது எதிர்பார்ப்புக்கு ஏற்ப அவர்களுக்குள் காதல் பூக்கிறது. ஆனால், அருணிடம் இருந்து விலகுவதும் தேடி வருவதுமாக இருக்கிறார் ஹேமா. அந்த விளையாட்டுக்கான காரணம் ஒருநாள் தெரிய வருகிறது.

ஹேமாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. அவரது கணவர் பெயர் அலெக்ஸ் (விதார்த்).

அருண் மீதான காதலை மனதில் சுமந்துகொண்டு வீடு திரும்பும் ஹேமாவுக்குத் தன் மடியில் முகம் புதைத்து கணவர் அழுவது விசித்திரமாக இருக்கிறது. ஏனென்றால், அவரைத் திருமணம் செய்தபிறகான ஓராண்டு காலத்தில் அப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததே இல்லை.

முதலிரவன்றே ஹேமாவைத் தனியே விட்டுவிட்டு வெளியே செல்லும் அலெக்ஸ் அடுத்தநாள் தான் வீடு திரும்புகிறார். அதற்கடுத்த நாட்களில் அவர்களுக்கு இடையேயான பிரிவு பெரிதாகிறது. ஏன் கணவர் தன்னை விட்டு விலகிச் செல்கிறார்? ஒருநாள் தற்செயலாக அலெக்ஸின் அலுவலகத்திற்கு சென்றபோது, அதனைத் தெரிந்து கொள்கிறார் ஹேமா.

Devil Movie Review

உதவியாளர் சோபியா (சுபஸ்ரீ ராயகுரு) உடன் அலெக்ஸ் காதலில் திளைப்பதை அறிகிறார். அதிர்ந்து போகிறார். அந்த அதிர்ச்சியோடு திரும்பி வரும்போதுதான், அவரது கார் அருண் பைக் மீது மோதிய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

’சோபியா எனக்குத் தந்த வலியை உணர்ந்தபோதே உனக்குச் செய்த துரோகத்தை உணர்ந்தேன்’ என்று ஹேமாவிடம் கதறுகிறார் அலெக்ஸ். அது அவரது மனதை நெகிழச் செய்கிறது.

அதுவரை வாழ்வில் காதலென்றால் என்னவென்றே அறியாதவராக இருந்தவர் ஹேமா. அந்த கணத்திற்குப் பிறகு, அவர் தன் வாழ்வு முழுவதற்குமான துணை அலெக்ஸ் என்று முடிவெடுக்கிறார். இதனை அருணிடம் விளக்கிச் சொல்கிறார். ’குட்பை’ சொல்லிவிட்டுப் போகிறார்.

அன்றிரவு, அலெக்ஸ் வீட்டில் இருக்கும்போதே ஹேமாவைச் சந்திப்பதற்காக வாசலுக்கு வந்து நிற்கிறார் அருண். அதனைக் காணும் ஹேமா அதிர்ச்சியடைகிறார்.

அதன்பிறகு என்னவானது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

’நரகத்தில் யாருமில்லை; சாத்தான்கள் எல்லாம் இந்த பூமியில் உலவுகின்றன’ என்ற ஷேக்ஸ்பியரின் வார்த்தைகளோடு இப்படத்தின் திரைக்கதை தொடங்குகிறது. அதற்கேற்ப, ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் சாத்தான் வெளிப்படும் கணங்களைக் காட்டுகிறது திரைக்கதை.

இடையே, நற்கதியைக் காட்டும் கடவுளர்களின் வருகையையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. ‘கள்ளக்காதலால் கொலை’ என்று தினசரிகளில் இடம்பெறத்தக்க ஒரு செய்திக்கு அசாதாரணமான வடிவத்தைத் தருவது அதுவே. ஆதலால், இதனை ‘கடவுளைக் காணச் செய்யும் சாத்தான்’ என்றும் சொல்லலாம்.

நேர்த்தியான உழைப்பு!

கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு பிரேமும் ஒரு புகைப்படம் போன்று அமைந்துள்ளது. கதையில் நிறைந்திருக்கும் இருண்மைக்கு ஏற்பச் சில காட்சிகளை வடிவமைத்திருந்தாலும், முன்பாதிக் காட்சிகள் காதலுக்கு முக்கியத்துவம் தந்து ‘பளிச்’சென்று ஒளி வெள்ளத்தை நிறைக்கின்றன.

மரியா கெர்லி ஆண்டனியின் கலை வடிவமைப்பு, வித்தியாசமானதொரு சூழலைப் பார்வையாளர்கள் பெற வேண்டுமென்று மெனக்கெட்டுள்ளது.

பூர்ணா உட்பட இக்கதையில் வரும் முக்கிய மாந்தர்கள் அணிந்துவரும் ஆடைகளே அவர்களது மனநிலையை உணர்த்துகிறது; அந்த வகையில் சிறப்பாக அமைந்திருக்கிறது ஷமீமா அஸ்லாமின் பங்களிப்பு

பார்வையாளர்கள் இருக்கை நுனியில் அமரும் விதமாக, பின்பாதியில் சில காட்சிகள் த்ரில் ஊட்டுகின்றன; ஹாரர் அனுபவத்தைத் தருகின்றன. ஆனால், அக்காட்சிகள் கதையின் போக்கு எந்த திசையில் செல்கிறது என்று கவனிக்கத் தடையாக உள்ளன. கூடவே, படத்தின் முடிவும் கூட ரொம்பப் பூடகமானதாக அமைந்துள்ளது. படத்தொகுப்பாளர் அதனை எளிமையாகக் கடத்தத் தவறியிருக்கிறார்.

மிஷ்கின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்; அவரே பாடல்களையும் எழுதியுள்ளார். பாடல் வரிகள் காட்சிகளுடன் பொருந்திப்போவது, பட இயக்கத்தில் அவருக்கு இருக்கும் அனுபவ முதிர்ச்சியைக் காட்டுகிறது. ’நிலவு உருகுதே’, ‘மனசும் மனசும்’, ‘விடியல் தேடும் மனிதர்க்கு’, ’எனக்குள்ளே எனக்குள்ளே’ பாடல்கள் மெலடியாக அமைந்தாலும், கேட்டவுடன் பிடித்துப்போகும் ரகமாக இல்லை. அதேநேரத்தில், பின்னணி இசை நம்மை அசையாமல் இறுகப் பிடித்துக்கொள்கிறது.

Devil Movie Review

இந்த படத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஒரு பாத்திரமாகவும் மிஷ்கின் தோன்றியிருக்கிறார். அந்த இடத்தை இன்னும் கொஞ்சம் தெளிவுற விளக்கியிருக்கலாம். அதனைச் செய்யாமல் விட்டது, தெளிவற்ற வகையில் கதையை நகர்த்துகிறது. மேலும், போஸ்டரில் மிஷ்கின் பெயரைப் பார்த்து வந்தவர்களுக்கு அவரது இருப்பினால் ஏமாற்றமே கிடைக்கிறது.

பூர்ணாவை மையப்படுத்தியே மொத்த திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளதால், அவருக்கு இதில் ‘ஸ்கோப்’ அதிகம். அதனை உணர்ந்து, அவரும் மிகத்திறம்படத் தன் பங்களிப்பைத் தந்துள்ளார். விரசத்திற்கு இடம் தராமல் பாவனைகளை வெளிப்படுத்தியிருப்பது அருமை.

விதார்த்துக்கு இதில் பெரிய பாத்திரமில்லை. என்றபோதும், தான் வரும் காட்சிகளில் அந்த கதாபாத்திரமாகவே தெரிய வேண்டுமென்பதில் மெனக்கெட்டிருக்கிறார்.

த்ரிகுன் என்றழைக்கப்படும் அருண் ஆதித்யா, இதில் நன்றாக நடித்துள்ளார் என்பது க்ளிஷேவாக இருக்கும். ஏனென்றால், அவரது முந்தைய படங்களும் அப்படித்தான் அமைந்திருந்தன.

சுபஸ்ரீ ராயகுரு இதில் விதார்த்தின் காதலியாக வருகிறார். கவர்ச்சி காட்டும் வகையில் அவரது பாத்திரம் அமைந்துள்ளது. அதனை அவர் மிகச்சரியாகச் செய்திருக்கிறார்.

ஆனால், அப்பாத்திரத்தைப் பின்பாதியில் காட்டாமல் தவிர்த்திருக்கிறார் இயக்குனர். அதனைக் கொஞ்சம் சரிப்படுத்தியிருக்கலாம்.

ஒரு திரைப்படமாக நோக்கினால், நடிப்பு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை மிகச்சரியாக ஒருங்கிணைத்து, மிக நேர்த்தியான உழைப்பைப் பெற்றிருக்கிறார் இயக்குனர் ஜிஆர் ஆதித்யா. அந்த வகையில், நல்ல வடிவத்தைக் கொண்டுள்ளது ‘டெவில்’.

அருமையான முன்பாதி!

ஹேமா – அருண் இடையிலான உறவு முகிழ்ப்பதைத் தொடக்கக் காட்சிகளும், அதன்பிறகு அலெக்ஸ் யார் என்பதைச் சொல்லும் வகையில் அதற்கடுத்து வரும் காட்சிகளும் தெளிவுறச் சொல்கின்றன. அந்த வகையில் முன்பாதி அருமை.

மொத்தக் கதையும் நான்கு பாத்திரங்களைச் சுற்றியே நகர்கிறது. மீதமுள்ள ஒரு டஜன் கலைஞர்கள் அவர்களோடு சம்பந்தப்பட்டவர்களாக, மிகச்சில காட்சிகளில் மட்டுமே வந்து போயிருக்கின்றனர்.

மனிதர்களுக்குள் சாத்தான் வெளிப்படுவதைக் காட்டுகின்றன கதையில் வரும் முக்கியத் திருப்பங்கள். அவற்றைச் சமாளிப்பதற்கான வல்லமையைத் தரும் கடவுள்தன்மை மிக்கவர்களாகச் சிலர் இத்திரைக்கதையின் தொடக்கம், முடிவு மற்றும் நடுப்பகுதியில் காட்டப்படுகின்றனர். ஆனால், முன்பாதியில் அதனைச் சொன்னவிதம் தெளிவாக இருந்தாலும், பின்பாதியில் அது சுத்தமாக இல்லை. அதனால், அசாதாரணமானதாகக் கருதப்பட வேண்டிய ஒரு கதை த்ரில்லராக, ஹாரராக, உணர்ச்சிக் கொந்தளிப்பு நிறைந்த ட்ராமாவாக தடம் புரண்டிருக்கிறது.

Devil Movie Review

உண்மையைச் சொன்னால், மனிதர்கள் அமைதியான வாழ்வை மேற்கொள்ள என்ன செய்ய வேண்டுமென்று ‘அட்வைஸ்’ செய்கிறது ‘டெவில்’. இது இப்படியானால் என்ன நிகழும்? அது அப்படி நிகழ்ந்தால் என்ன முடிவு கிடைக்கும் என்ற பல்வேறு வாய்ப்புகளை விலாவாரியாக விளக்குகிறது. அதனைப் புரிந்துகொள்வதில் நிறையவே தடுமாற வேண்டும் என்பதுதான் ‘டெவில்’ படத்திலுள்ள சிக்கல்.

ஆதலால், அனைத்துவிதமான சுவைகளும் நிறைந்த ஒரு மசாலா படம் பார்க்க வேண்டும் என்பவர்களுக்கு ‘டெவில்’ நிச்சயம் திருப்தி தராது. வழக்கமான கமர்ஷியல் சினிமாவுக்கு மாறான அனுபவத்தைத் திரையில் பெற விரும்புபவர்களை இது ஏதோ ஒருவகையில் திருப்திப்படுத்தும். அந்த வகையில், மிகச்சாதாரணமானதொரு கதைக்கு வித்தியாசமான ‘உரு’ தந்திருக்கிறார் இயக்குனர் ஜிஆர் ஆதித்யா.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

”உயிருடன் தான் இருக்கிறேன்” நடிகை பூனம் பாண்டே விளக்கம்!

விமர்சனம்: மறக்குமா நெஞ்சம்!

“எங்கள் குடும்பத்தில் ஒருவர்” : ஓபிஎஸ் – சசிகலா சந்திப்பு!

நாடாளுமன்றத்தில் திமுக கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share