மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர்: ஏக்நாத் சிண்டேவுக்கு பாஜக ஆதரவு!

Published On:

| By admin

மகாராஷ்டிராவின் சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழ்ந்த நிலையில், முதல்வராக பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்பார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.ஏக்நாத் சிண்டே முதல்வராக பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் ஆகாதி கூட்டணி அரசுக்கு எதிராக சிவசேனாவைச் சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் சிண்டே தலைமையில் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர்.

ADVERTISEMENT

இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்ட நிலையில் இதற்கு எதிராகச் சிவசேனா தலைமை கொறடா சுனில் பிரபு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தடை இல்லை என்று தெரிவித்தது.

அதன்படி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில் நேற்று இரவு உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாகத் தெரிவித்தார். நேற்று இரவு ஆளுநரை நேரடியாகச் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டது. அதுபோன்று முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவி ஏற்பார், ஏக்நாத் சிண்டே துணை முதல்வராக இருப்பார் என்று சொல்லப்பட்டது.

ADVERTISEMENT

இதனிடையே அசாம் மாநிலம் கவுகாத்தியிலிருந்து அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏக்நாத் சிண்டே தலைமையில் கோவா வந்தனர். கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பனாஜியில் உள்ள தாஜ் ஓட்டலுக்கு வந்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து அடுத்த முதல்வர் யார் என்று தேவேந்திர பட்னாவிஸ் ஆலோசனை நடத்தினார். கோவாவில் இருந்து மும்பை வந்த ஏக்நாத் சிண்டே, பட்னாவிஸை சந்தித்து பேசினார். பின்னர் மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை ஏக்நாத் சிண்டே, பட்னாவிஸ் இருவரும் சந்தித்து பேசினர். தங்களிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதங்களுடன் ஆட்சியமைக்க உரிமை கோரினர்.

ADVERTISEMENT

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த தேவேந்திர பட்னாவிஸ், “மகாராஷ்டிரா முதல்வராக இன்று மாலை 7.30 மணிக்கு ஏக்நாத் சிண்டே பொறுப்பேற்பார். இன்று பதவியேற்பு விழா முடிந்ததும், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, சிவசேனா மற்றும் பாஜக தலைவர்கள் பதவியேற்பார்கள். நான் அரசாங்கத்திலிருந்து விலகி இருப்பேன். மகா விகாஸ் ஆகாதி கூட்டணி அரசு தினமும் இந்தத்துவாவை அவமதித்து வந்தது. பாஜக முதல்வர் பதவிக்காகச் சண்டை போடவில்லை” என்று கூறினார்.

பட்னாவிஸ், மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக அறிவித்துள்ளார்.

288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பாஜக பலம் 106ஆக இருக்கிறது. 145 பெரும்பான்மை என்ற நிலையில், அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் உட்பட தங்களுக்கு 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக பாஜக கூறுகிறது.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share