துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய அனுமதி கேட்டு பாஜக மூத்த தலைவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளதாக மகாரஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று (ஜூன் 5) தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 294 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.
ஆட்சியமைக்க போதுமான பெரும்பான்மை பாஜகவுக்கு இல்லாத நிலையில், ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க உள்ளது.
இந்தநிலையில், பாஜகவின் கோட்டை என்று சொல்லப்பட்டு வந்த உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்தியா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது.
குறிப்பாக, மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி 30 இடங்களிலும், என்டிஏ 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்தநிலையில், தேர்தல் தோல்வி குறித்து பாஜக மூத்த தலைவர்கள் மும்பையில் இன்று ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பட்னாவிஸ், “மகாராஷ்டிராவில் பாஜகவின் தோல்விக்கு முழுமையாக நான் பொறுப்பேற்கிறேன். நான் தான் கட்சியை வழிநடத்தினேன். எங்கே தவறு நடந்தது என்பதை ஆராய்ந்து அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபடுவேன். புதிய வியூகத்தை அமைத்து மக்களை சந்திப்போம்.
துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய அனுமதி கேட்டு பாஜக மூத்த தலைவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அப்போது தான் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் கட்சியை வலுப்படுத்தி வெற்றி பெற வைக்க முடியும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்தியா கூட்டணி பாசிசத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை மீட்கும் – ஸ்டாலின்