நடிகையாக கோலோச்சியதைத் தாண்டி சின்னத்திரையில் ‘கோலங்கள்’ சீரியல் மூலம் தமிழ் சீரியல் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் நடிகை தேவயானி. கோலங்களில் இவர் நடித்த அபி ரோல் ஆனது, தமிழ் ரசிகர்களின் க்ளாசிக்கள் கதாபாத்திரமாக மாறியது. மீண்டும், இனிப்பான செய்தி என்னவென்றால், சின்னத்திரைக்கு ரீ-எண்ட்ரி கொடுக்கிறார் தேவயானி. இதில் என்ன புரட்சி என நீங்கள் நினைக்கலாம். அவர் தேர்வு செய்திருக்கும் சீரியலின் கதை தான் இதில் ஹைலைட்.
தமிழ் சீரியல்களில் மாமியார் மருமகள் சண்டை, திருமணமான நாயகனை அபகரிக்க திட்டம்தீட்டும் வில்லி, பாவப்பட்ட அல்லது வீட்டு வேலைக்காரியான நாயகியைக் காதலிக்கும் பணக்கார நாயகன் என்று தான் பெரும்பாலும் கதைக்களம் இருக்கும். போட்டி நிறைந்த இந்த சீரியல்களில், ஜீ தமிழ் கொஞ்சம் வித்தியாசமானக் கதைகளத்துடன் புது சீரியல் ஒன்றை களமிறக்கியிருக்கிறது. “புது புது அர்த்தங்கள் ’’ என்று பெயரிடப்பட்ட இந்த சீரியல் கடந்த மார்ச் 22 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் கதைப்படி கணவரையிழந்த தேவயானி, தன் மகன் மற்றும் மாமனாருடன் வாழ்ந்து வருகிறார். தேவயானியின் மருமகள் அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார். தன் மகனுக்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் தேவயானிக்கு வாழ்க்கை துணை வேண்டும் என்று எண்ணும் அவரின் மருமகள் தன் அத்தைக்கு வரன் பார்க்கத் தொடங்குகிறார்.மாமியாருக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையை தேடிக் கண்டுபிடிக்கிறார் இந்த மாடர்ன் மருமகள். இதுதான் சீரியலின் ஒன்லைன். வித்தியாசமான கதைக்களம் தானே?
இந்த சீரியலில் இன்னொரு ஹைலைட் என்னவென்றால், தேவயானிக்கு ஜோடியாக அபிஷேக் நடித்திருக்கிறார். தேவயானி-அபிஷேக் ஜோடி ஏற்கெனவே கோலங்கள் சீரியல் மூலம் பரிட்சையமானவர்கள். கோலங்கள் சீரியல் ரசிகர்களுக்காகவும், இந்த சீரியலின் புதுமையான கதைக்காகவும் தான் சீரியலில் நடிக்க ஒப்புக் கொண்டதாக தேவயானி ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
சீரியலின் ப்ரோமோ, முதல் எபிசோட் என அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. டிஆர்பி ரேட்டிங்கில் டாப் லிஸ்டில் வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
**- ஆதினி**
.
