ஆப்கானிஸ்தானின் குன்னார் பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவு 11.47 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 6.0 ஆக பதிவான இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி தற்போது வரை 800 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 2,800-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
நிலநடுக்க அபாயம் அதிகம் உள்ள ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கில் குன்னார் உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் நேற்று இரவு 11.47 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள நகங்கர் மாகாணம் ஜவாலாபாத்தை மையமாக கொண்டு 8 கி.மீட்டர் ஆழத்தில் பதிவான இந்த நில நடுக்கம் ரிக்டரில் 6.0 அலகுகளாகப் பதிவானது.
இதைத் தொடர்ந்து 20 நிமிடங்கள் கழித்து மீண்டும் அதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. அடுத்தடுத்து தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இந்த நிலநடுக்கங்களால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் கண் முன்பாகவே கட்டிடங்கள் சீட்டு கட்டுகள் போல சரிந்து விழுந்தன.
இந்த நிலநடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும் 2,800க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டுப் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
