மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 30) காலை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி விழா மற்றும் 62வது குருபூஜை கடந்த 28ஆம் தேதி தேவர் நினைவிடத்தில் தொடங்கியது. நேற்று லட்சார்ச்சனை நடைபெற்ற நிலையில் இன்று தேவர் குருபூஜை நடைபெறுகிறது.
இந்த நிலையில் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதையொட்டி மதுரைக்கு விமானம் மூலம் சென்ற முதல்வர் ஸ்டாலின் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு இன்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
அங்கிருந்து தெப்பக்குளம் சென்ற முதல்வர் ஸ்டாலின் மருது சகோதரர்கள் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து காலை 9:30 மணிக்கு பசும்பொன்னில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலினை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன், தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன், தென்னாட்டு மக்கள் கட்சி தலைவர் கணேச தேவர், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் சமுதாய அமைப்பினரும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர்.
அரசியல் கட்சித் தலைவர்கள் வர உள்ளதால் பசும்பொன்னில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் பணி!
ஹெல்த் டிப்ஸ்: பண்டிகைகளால் அதிகரிக்கும் உடல் எடை… கட்டுப்படுத்துவது எப்படி?
