பஞ்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் விவரத்தை பதிவு செய்ய வேண்டும்!

Published On:

| By admin

புதுக்கோட்டை மாவட்டத்தில் பஞ்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் விவரத்தை ஊராட்சி அளவில் பதிவு செய்யப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், அன்னவாசல், விராலிமலை, குன்றாண்டார் கோவில் மற்றும் திருமயம் ஒன்றியங்களில் இருந்து 13,000 பெண்கள் திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் இயங்கிவரும் பஞ்சாலைகளின் தங்கும் விடுதிகளில் தங்கியும், தினசரி பஞ்சாலை வாகனங்களில் சென்றும் வேலை செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் பஞ்சாலைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் தங்கும் விடுதிகள் குறித்த புதுக்கோட்டை மாவட்ட அளவிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்றது.

இதில் முக்கிய நோக்கமாக இந்தப் பெண்களின் பணித்தளங்களில் ஏற்படும் பணி சம்பந்தமான மற்றும் பாலின சம்பந்தமான அத்துமீறல்களிலிருந்து பாதுகாப்பதற்காகவும், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்காகவும் அனைத்து பணித்தளங்களிலும் உள் புகார் குழு அமைக்கப்பட வேண்டும்.

ADVERTISEMENT

பஞ்சாலைகளில் இயங்கும் தங்கும் விடுதிகள் அனைத்தும் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் பதிவுசெய்து பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் பகுதிகளில் பஞ்சாலைகளில் பணிபுரியும் வளரிளம் பெண்கள் குறித்த அனைத்து விவரங்களையும், பணி செய்யும் நிர்வாகத்தின் அனைத்து தகவல்களையும் ஊராட்சி அளவில் பதிவு செய்து அவற்றை மாவட்ட அளவில் சமூகநலத் துறையின் கீழ் ஆவணப்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டன.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் மக்கள் அமைப்பு தலைவர் மெல்வின் தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனிதா, குழந்தைகள் நலக்குழுமத்தைச் சேர்ந்த சதாசிவம், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரசியா சுரேஷ், குற்ற வழக்கு தொடர்பு இயக்க வக்கீல் மஞ்சுளா உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில் தொழிற்சங்கத்தினர், தொண்டு நிறுவனத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

**ராஜ்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share