நா.மணி, வே.சிவசங்கர்
தமிழ்நாட்டின் வரலாற்றில், முதல் முதலாக, ஒரு பொருளாதார ஆய்வு அறிக்கை, வரவு செலவு திட்ட அறிக்கை சமர்பித்தலுக்கு முன்பாக சட்டசபையில் வைக்கப்பட்டுள்ளது. இதனை அனைவரும் மனம் உவந்து பாராட்ட வேண்டும். detailed report of TN economic survery
ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி: detailed report of TN economic survery
தமிழ்நாட்டின் பொருளாதார நிலை பற்றி விரிவானதொரு மதிப்பீட்டை, இந்த ஆய்வறிக்கை முன் வைத்துள்ளது. பொருளாதார வளர்ச்சி, விலைவாசி உயர்வு, வேளாண்மை, தொழில், சேவைகள், வேலைவாய்ப்பு சமூகப் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் என எல்லாவற்றைப் பற்றியும் புள்ளிவிவர ஆதாரங்களோடு பேசுகிறது இந்த பொருளாதார ஆய்வு அறிக்கை. துறைவாரியாக வளர்ச்சி இடைவெளிகள் . எங்கு தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும். எதிர்காலத்தில் அக்கறை செலுத்த வேண்டிய விசயங்கள் என சமூக அக்கறையோடு, இந்த ஆய்வு அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் போக்கை, தேசிய சராசரி வளர்ச்சியோடு மட்டுமல்ல, சர்வதேச வளர்ச்சி போக்குகளோடும் ஒப்பிட்டு கூறியிருப்பது சிறப்பு. அத்தோடு, சர்வதேச, இந்திய வளர்ச்சி போக்குகளை காட்டிலும், தமிழ்நாடு எவ்வாறு உயர்ந்து நிற்கிறது என்பதையும், மொத்த உள்நாட்டு தேசிய உற்பத்தி மதிப்பை வைத்து அளந்து காட்டி இருப்பது பாராட்டுக்குரியது. மொத்த தேசிய உள்நாட்டு மதிப்பு அடிப்படையில் இந்த ஒப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் பார்க்கும்போதும், தமிழ்நாட்டின் வளர்ச்சி மெச்சத்தகுந்தது. இந்திய தனிநபர் வருமானம் 2022 -23இல் 1.72 லட்சம் ரூபாயாக இருக்கும் போது, தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் 2.77 லட்சமாக இருக்கிறது என்பதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விலைவாசி:
விலைவாசி உயர்வு, அதன் போக்குகள் குறித்தும் நன்கு தொகுக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விலைவாசி குறியீட்டு எண் அடிப்படையில் இந்திய சராசரி மற்றும் தேசிய சராசரி விலைவாசி ஒப்பிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. விலைவாசியை கட்டுப்படுத்தவும் குறைக்கவும் தமிழ்நாட்டில் பொது விநியோகத்தை எவ்வாறு வலுவாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதும் கூறப்பட்டுள்ளது. பொது விநியோக முறையும் இலவச மின்சாரமும் விலைவாசி குறைப்புக்கு ஓர் சிறந்த கருவியாக பயன்பட்டுள்ளது என அறிக்கை கூறுகிறது. அதேபோல், ஒவ்வொரு பொருளின் நுகர்வோர் விலைவாசி குறியீட்டு எண் அடிப்படையில் மாநிலத்தையும் அகில இந்திய சராசரியையும் ஒப்பிட்டு, முன் வைக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை:
தமிழ்நாட்டின் பயிர் சாகுபடி எப்படி இருக்கிறது? ஒருங்கிணைந்த பயிர் சாகுபடி எப்படி இருக்கிறது? நீர் ஆதாரம் எப்படி இருக்கிறது? வேளாண்மை உற்பத்தி திறன் மேம்பாடு, கடன் வசதி, எந்திரமயமாக்கல் ஆகியவை பற்றி தெளிவாக இந்த அறிக்கை பேசுகிறது. அத்தோடு தோட்டக்கலைக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம், அதற்கான நிதி ஒதுக்கீடு, அதிலிருந்து கிடைக்கும் உற்பத்தி ஆகியவும், நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமரின் பீமா யோஜனா திட்டத்தின் வழியாக மேற்கொள்ளப்படும் பயிர் காப்பீடு, எவ்வாறு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் அறிக்கை எடுத்துக் கூறுகிறது. ஒரு திட்டம் சராசரியாக இருந்தால் அதனை அரசு எப்படி பயன்படுத்திக் கொள்கிறது என்பதற்கும் இது ஒரு சான்று.
தொழில் வளர்ச்சி: detailed report of TN economic survery
தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி, முந்தைய ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என ஆய்வறிக்கை கூறுகிறது. அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் மூன்றாம் இடம் வகித்து வருகிறது. 2019-20 முதல் தமிழ்நாட்டின் ஏற்றுமதி 30 பில்லியனாக இருந்தது, இப்போது அது 51 பில்லியன் ஆக அதிகரித்துள்ளது. வேலை வாய்ப்பு, வேலையின்மை இரண்டையும் அறிக்கை பேசுகிறது. தொழிற்சாலைகள் வளர்ச்சி பற்றிய ஒரு நல்ல மதிப்பீட்டை அறிக்கை முன்வைக்கிறது. வருங்கால வைப்பு நிதி 13 விழுக்காடு அதிகரித்துள்ளது என்பதை இதற்கு ஆதாரமாக பொருளாதார ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கல்வி சுகாதாரம் வறுமை ஒழிப்பு: detailed report of TN economic survery
கல்வி சுகாதாரம் வறுமைக் குறைப்பு ஆகியவற்றில் தமிழ்நாடு காத்திரமான பங்களிப்பை செலுத்தி வருவது பரவலாக அறியப்பட்ட உண்மை. அதனை கோடிட்டுக் காட்ட அறிக்கையின் புள்ளி விவரங்கள் சான்றளிக்கிறது. சுகாதாரத்தின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி குறியீடு சிசு மரண விகிதம். இது தமிழ்நாட்டில் வெறும் நான்கு விழுக்காடு. ஆனால், தேசிய சராசரியோ 28 விழுக்காடு.

கவனத்தில் கொள்ள வேண்டியவை : detailed report of TN economic survery
🔷மாநிலத்தின் வளர்ச்சியை தேசிய, சர்வதேச வளர்ச்சிய நிலைமைகளோடு ஒப்பிடும்போது, மாநிலத்துக்குள்ளும் ஓர் ஒப்பீடு அவசியம். அது, மாநிலத்துக்குள் மாவட்டங்களுக்கு இடையே உள்ள வளர்ச்சி வேறுபாடுகளை பகுப்பாய்வு செய்யவும், புரிந்து கொள்ளவும் தீர்வு காணவும் பயன்படும். வட மாவட்டங்கள் மேற்கு மாவட்டங்களில் வளர்ச்சி விகிதம் தனிநபர் வருமானம் அதிகம். கிழக்கு தெற்கு மாவட்டங்களில் வளர்ச்சி குறைவு இதனை கருத்தில் கொள்ள அதற்கு ஏற்ற ஆய்வுகள் தீர்வுகள் அவசியம்.
🔷தமிழ்நாடு வேகமாக முன்னேறி வரும் மாநிலம் என்றாலும், மத்திய அரசின் வரிப்பகிர்வு
முறை, நிதிக் குழு பரிந்துரைகள் அடிப்படையிலான சிக்கல்கள் ஜிஎஸ்டி பகிர்வில் உள்ள சிக்கல்கள் ஆகியவற்றை இந்த பொருளாதார ஆய்வு அறிக்கைகள் விரிவாக ஆய்வு செய்திருக்க வேண்டும் .
🔷விலைவாசி உயர்வில் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடைவெளி உள்ளது. கிராமப்புற விலைவாசி நகர்புற விலைவாசி காட்டிலும் இரண்டு விழுக்காடு அதிகமாக உள்ளது. இதனை ஆய்வுக்கு உட்படுத்தி இருக்க வேண்டும்.
🔷தமிழ்நாட்டில் குறை வருவாய் பிரிவினர் 54 விழுக்காடு தங்கள் வருமானத்தை உணவு தேவைக்கும் எரிபொருள் தேவைக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இதனையும் ஆய்வு அறிக்கை விவாதத்திற்கு உட்படுத்தி இருக்க வேண்டும்.
🔷பொது விநியோகம் முறை மிகச் சிறப்பாக மக்களுக்கு பயன்பட்டு வருகிறது என்பதை பலரும் அறிவர். ஆனால், இந்தப் பொது விநியோக முறை, எவ்வாறு விலைவாசியை கட்டுப்படுத்த, பயன்படுகிறது என்பதை மக்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துக் கூறி இருக்கலாம்.
🔷தமிழ்நாட்டின் ஆண்டு சராசரி மழை பொழிவு, கடந்த 20 ஆண்டுகளில் 11 விழுக்காடு குறைந்துள்ளது. அதேசமயம், திடீர் மழை, வெள்ளம், புயல் , ஆகியவையும் அதிகரித்திருக்கிறது. இது பருவ கால மாற்றத்தின் ஒரு முக்கிய பகுதியெனில், இதனை எப்படி கையாள்வது? எப்படி புரிந்து கொள்வது? எப்படி தடுத்தாட்கொள்வது? போன்ற சவால்களை பற்றி இந்த ஆய்வு ஆய்வறிக்கையில் ஆய்வுக்கு உட்படுத்தி இருக்க வேண்டும்.

🔷நிலத்தடி நீர்மட்டம் மூன்றில் இரண்டு பங்கு மாவட்டங்களில் சராசரிக்கும் கீழே குறைந்துவிட்டது. இதற்கான ஆய்வுகளும் தீர்வுகளும் அவசியம்.
🔷தமிழ்நாட்டில் நல்ல வேளாண்மை உற்பத்தி இருக்கிறது. அதிக உற்பத்தி செலவு காரணமாக வேளாண் வருவாய் குறைவாக உள்ளது. இதனையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
🔷சிறு நடுத்தர தொழில்களுக்கு கடன் வசதி சிக்கல்கள் இன்னும் கவனமாக பரிசீலனை செய்யப்பட வேண்டும்.
🔷தமிழ்நாட்டில் முறை சாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம். அதிலும் குறிப்பாக நகர்புற முறைசாரா தொழிலாளர்கள் எண்ணிக்கை 46 விழுக்காடு. இதனை குறைக்க நடவடிக்கைகள் என்னவாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் ஆய்வறிக்கை பேசியிருக்கலாம்.
🔷தொழில் முதலீடு, கல்வி ஆகியவற்றில் முன்னேற்றம் அடைந்த மாநிலம். அதேசமயம் படித்து வேலையற்று இருப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகம். இதற்காக விரிவான ஆய்வுகள் திட்டங்கள் தேவை.
🔷கல்வி, சுகாதாரம் மேம்பட்ட தமிழ்நாடு எனக் கேரளாவோடு பல விதங்களில் ஒப்பிடப்பட்டு பேசுகிறோம். ஆனால், வேலைவாய்ப்பில் பெண்களின் பங்கேற்பு என்று வருகிறபோது, கேரளாவை காட்டிலும் தமிழ்நாடு மிகவும் குறைவாக இருக்கிறது இதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
🔷கல்வியில் சிறந்து விளங்குகிறோம். உயர்கல்வி வளர்ச்சி ஐம்பது விழுக்காட்டிற்கு மேல். இதில் அரசின் பங்களிப்பு எத்தனை விழுக்காடு. தனியார் பங்களிப்பு எத்தனை விழுக்காடு? தனியார் கல்வி அதீதமாக அதிகரித்து கல்விச் செலவு கூடி வருகிறது. அதேசமயம் படித்தவர்கள் வேலையின்மை அதிகரித்து வருகிறது. இந்த நிலை என்ன விளைவுகளை உருவாக்கும்? அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றியும் வருங்கால பொருளாதார ஆய்வறிக்கைகள் அக்கறை செலுத்த வேண்டும்.
கட்டுரையாளர்

நா.மணி,
இயக்குனர், சமூக மேம்பாட்டுக்கான ஆராய்ச்சி மையம்.

வே.சிவசங்கர்,
பேராசிரியர், புதுவை பல்கலைக்கழகம்.