கோவை கார்வெடிப்பு நிகழ்வு பயங்கரவாத தாக்குதல் என்றும் அதற்கான ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் ஆளுநர் மாளிகை ட்விட்டர் பக்கத்தில் இன்று(நவம்பர் 6) குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி கோவை கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு வெளியே கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது.
இதில் ஜமேஷா முபின் உயிரிழந்தார். இந்த வழக்கில் 6பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், கடந்த 28-ஆம் தேதி கோவை மாவட்டம் நவக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான தங்கும் விடுதிகள் கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி கோவை விவகாரம் பற்றி பேசினார்.
அப்போது அவர், “கோவையில் நடந்தது மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல். இந்த சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்களை வைத்து மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடத்தச் சதித்திட்டம் இருந்தது தெரியவந்துள்ளது.
கோவையை மையமாகக் கொண்டு நீண்ட காலமாகத் தீவிரவாத சதி செயல்களுக்குத் திட்டம் தீட்டப்படுவதாக அறியப்பட்டுள்ளது.
தற்போது நடந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களும் நீண்ட காலமாகப் புலனாய்வு அமைப்பின் கண்காணிப்பிலிருந்துள்ளனர். அவர்கள் புதிதாக கண்காணிப்பு வளையத்தில் வரவில்லை. நம்முடைய கண்காணிப்பு எங்கே தோல்வி அடைந்தது. எங்கே தவறவிட்டோம் என்று தெரியவில்லை.
இந்த பயங்கரவாத சதித்திட்டத்தில் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. கோவை சம்பவத்தை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளுக்குச் செல்கின்றனர்.
கோவை விவகாரத்தில் நான்கு நாட்கள் கழித்துத் தான் என்.ஐ.ஏ வுக்கு வழக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்த காலதாமதம் ஏன்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆளுநரின் பேச்சுக்கு அன்றைய தினம் மாலையே தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்திருந்தார். கோவை வழக்கை என்.ஐ.ஏ.விடமும் ஒப்படைத்ததில் எந்த தாமதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.
அதுபோன்று என்ன ஆதாரங்கள் அழிக்கப்பட்டன என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன. ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டன.
இந்த கேள்விகளுக்கு எல்லாம் ஆளுநர் தரப்பில் இருந்து பதில் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற ஆளுநர் சென்னை திரும்பியுள்ள நிலையில், கோவை கார்வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏவிற்கு வழங்கியதில் தாமதம் ஏற்பட்டது என தனது நிலைப்பாட்டை மீண்டும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை ட்விட்டர் பக்கத்தில், “கடந்த 28-ஆம் தேதி கோவையில் பேசிய வீடியோக்களுடன், “கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் உயர்மட்ட பயங்கரவாத சதித்திட்டத்தில் முக்கிய ஆதாரங்களை அழிப்பது குறித்து ஆளுநர் கவலை தெரிவித்தார்.
அவர் தமிழகக் காவல்துறையைப் பாராட்டினார். மற்றும் பயங்கரவாதிகள் யாருக்கும் நண்பர்கள் இல்லை.
பிஎப்ஐ மீதான தடையைத் தொடர்ந்து 5நாட்களுக்கும் மேலாக மாநிலத்தில் நடத்தப்பட்ட இலக்கு தாக்குதல்களை ஆளுநர் நினைவுகூர்ந்தார். பயங்கரவாதத்தை முறியடிக்க நிர்வாக நிறுவனங்களிடையே ஒற்றுமை வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
பிரியா
அண்ணாமலை அரசியலும், ஆளுநர் ரவியின் அரசியலும்!
தெலங்கானா இடைத்தேர்தல் : பாஜக VS டிஆர்எஸ்… வெற்றி பெறப்போவது யார்?
Comments are closed.