வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுவடையாது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (28-11-2024) காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, இலங்கை – திரிகோணமலையிலிருந்து கிழக்கு-வடகிழக்கே சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 310 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தென்கிழக்கே 410 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்த புயல் நகர்ந்து வந்த வேகம் நேற்று 12 கிமீட்டரில் இருந்து 3 கிமீட்டராக குறைந்தது.
இந்நிலையில் இன்று 10கிமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக கூறியிருந்த சென்னை வானிலை ஆய்வு மையம் 30ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும் என்றும் கூறியிருந்தது.
இந்தசூழலில் இன்று (நவம்பர் 28) இரவு இந்திய வானிலை ஆய்வு மையம், வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடையாது என்று கூறியுள்ளது.
“தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடகிழக்கு நோக்கி நகர்ந்து வந்தது. இது, மாலை 5.30 நிலவரப்படி திருகோணமலைக்கு வடகிழக்கே 200 கி.மீ, நாகப்பட்டினம், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 410 கி.மீ., சென்னைக்கு தென்கிழக்கே 470 கி.மீ.தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
வடமேற்கு நோக்கி நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து, 29ம் தேதி மாலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். மேலும் வடமேற்கு நோக்கி நகர்ந்து, நவம்பர் 30ம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு இல்லை” என்றும் கூறியுள்ளது வானிலை ஆய்வு மையம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா