கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையின் காரணமாக தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, தஞ்சாவூர், கடலூர், மதுரை, வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் டெங்குவால் நாள்தோறும் 100 முதல் 120 பேர் வரை பாதிக்கப்படுவதாகவும், மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் நாள்தோறும் 25 முதல் 30 பேர் டெங்கு காய்ச்சலால் பாதித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
டெங்குவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு அறிகுறிகள் இல்லாமல் இருக்கும் அல்லது லேசான அறிகுறி இருக்கும். மேலும் 1 -2 வாரங்களில் பெரும்பாலும் குணமடைவார்கள். அரிதாகவே டெங்கு கடுமையானதாக மாறி மரணத்திற்கு வழிவகுக்கும். டெங்கு காய்ச்சலுக்கு குறிப்பிட்ட சிகிச்சைகள் எதுவும் இல்லை. டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன, வராமல் இருக்க என்னென்ன முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்துப் பார்ப்போம்.
டெங்கு காய்ச்சல் வர காரணம் என்ன?
டெங்கு என்பது டெங்கு வைரஸால் (DENV)ஏற்படும் ஒரு வைரஸ் தொற்று. இது பாதிக்கப்பட்ட கொசுக்கள் கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. டெங்கு அதிகரிப்புக்கு காரணம் மழை பெய்து தேங்கி இருக்கக்கூடிய நீரில் கொசு உற்பத்தி அதிகரிப்பதே காரணமாக உள்ளது. தேங்கியுள்ள மழைநீரில் உற்பத்தியாகும் ஏடிஸ் வகை கொசுக்கள் கடிப்பதால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது.
டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்
- அதிக காய்ச்சல் (104°F)
- கடுமையான தலைவலி
- கண்களுக்குப் பின்னால் வலி
- தசை மற்றும் மூட்டு வலிகள்
- குமட்டல்
- வாந்தி
- வீங்கிய நினநீர் முனைகள்
காய்ச்சலுடன் வயிற்றுப்போக்கு, ஈறுகளில் ரத்தக்கசிவு இருப்பதும் டெங்குவிற்கான அறிகுறியே என்றும், மூன்று நாட்களுக்கு மேலும் அதீத காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனையை அணுக வேண்டும் என தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
டெங்கு காய்ச்சல் வருவதை தடுப்பது எப்படி?
- டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் பகலில் சுறுசுறுப்பாக இருக்கும். ஆகவே, கொசுக்கடியில் இருந்து பாதுகாக்க உடலை முடிந்தவரை மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும்.
- பகலில் தூங்கினால் கொசுவலையை பயன்படுத்த வேண்டும்.
- வீட்டு சன்னலை திரையிட்டு மூடிவிட வேண்டும்
- கொசு பேட், கொசு வர்த்தி, ஆல் அவுட் உள்ளிட்ட கொசு விரட்டிகளை பயன்படுத்தலாம்
- வீட்டின் அருகில் குட்டை போல தண்ணீர் தேங்கியிருந்தால் உடனே அகற்ற வேண்டும்
- வீட்டில் குப்பைகள் சேராமல் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்
- வீட்டில் நீர்பிடித்து வைக்கும் பாத்திரங்களை வாரத்திற்கு ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும்
டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டால் என்ன செய்வது?
- ஓய்வு எடுக்க வேண்டும்
- அடிக்கடி தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும்
- மருத்துவர்களின் பரிந்துரைத்த மாத்திரை, மருந்துகளை சரியாக சாப்பிட வேண்டும்
- டெங்கு அறிகுறிகள் கடுமையானதாக இருந்தால் உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.
