பண மதிப்பிழப்பு தொடர்பாக மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 12) உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி திடீரென நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.
இதற்கு எதிராக 57 ரிட் மனுக்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கானது அப்துல் நசீர், பி.ஆர்.கவாய், எ.எஸ்.போபண்ணா, ராமசுப்பிரமணியம், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டிருந்தது.
நிலுவையில் இருந்த வழக்கு மீண்டும் கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘பண மதிப்பிழப்பு நடவடிக்கை விவகாரத்தில் இன்னும் ஏதாவது விசாரிக்கப்பட வேண்டி இருக்கிறதா? அப்படியென்றால் அதுகுறித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
அதனால் இந்த வழக்கை அக்டோபர் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்.

அன்றைய தினம் பண மதிப்பிழப்பு தொடர்பாக எதனையெல்லாம் விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தெளிவாக தெரிவிக்கலாம்.
அதனை பரிசீலித்து அவை அனைத்தையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என தெரிவித்து நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், அந்த வழக்கு நீதிபதி அப்துல் நசீர் தலைமை வகிக்கும் அமர்வு முன்பு இன்று (அக்டோபர் 12) விசாரணைக்கு வந்தது.
முதலில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இது, நிர்வாக ரீதியான விவகாரம். நீதிமன்றம் தனது நேரத்தை வீணடிக்க வேண்டாம்” என கோரிக்கை வைத்தார்.
இருப்பினும், வழக்கின் விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்றது. மனுதாரர் ப.சிதம்பரம் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர்,
’இந்த பண மதிப்பிழப்பு எத்தகைய பாதிப்புகளை எல்லாம் ஏற்படுத்தியது, ஒரே இரவில் இப்படியான அறிவிப்பை வெளியிடுவதற்கு என்ன நடைமுறை இருக்கிறது?
அனைத்து விதிமுறைகளும் மீறப்பட்டிருக்கிறதா உள்ளிட்டவற்றை விசாரிக்க வேண்டும்” என்கிற வாதத்தை முன்வைத்தார்.
இறுதியாக, பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று உத்தரவிட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
பொருளாதார வல்லுனர்களின் ஆய்வுகளும்… நோபல் பரிசும்! – பகுதி 2