தூய்மை பணியாளர்களின் கோரிக்கை – சென்னை மாநகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!

Published On:

| By Kavi

தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் வகையில் மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

சென்னை மாநகராட்சியில் இரண்டு மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ADVERTISEMENT

இதனால் ஆகஸ்ட் 13ஆம் தேதி இரவு தூய்மை பணியாளர்களை கைது செய்து ரிப்பன் மாளிகை முன்பிருந்து அப்புறப்படுத்தினர். 

இதற்கிடையே தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

ADVERTISEMENT

அப்போது மனுதாரர் சார்பில், “தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பணி நிரந்தரம் செய்ய கோரியும் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்க முடியாது. இதற்கு தொழிலாளர் நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும். 

மாநகராட்சி நடவடிக்கையால் 2000 தூய்மை பணியாளர்களின் வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. 15 ஆண்டுகாலம் சேவையாற்றியவர்களை குப்பை போல தூக்கி எறிய கூடாது” என்று வாதிடப்பட்டது. 

ADVERTISEMENT

இதற்கு மாநகராட்சி சார்பில், “பணியாளர்களை தூக்கி எறிய போவதில்லை. அவர்கள் வேலையை விட்டு வெளியேற்றப்பட மாட்டார்கள். ஒப்பந்ததாரர் மூலம் பணி வழங்கப்படும். சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 11 மண்டல தூய்மை பணிகள் ஏற்கனவே தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டு விட்டன. 

தற்போது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 2000 தூய்மை பணியாளர்களுக்கும் ஒப்பந்த நிறுவனம் அதிக ஊதியத்துடன் வருங்கால வைப்பு நிதி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட சலுகைகளுடன் வேலை வழங்கும்” என்று தெரிவிக்கப்பட்டது. 

ஒப்பந்த நிறுவனம் சார்பில், “தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவது அரசின் கொள்கை முடிவு. இதில் விதிமீறல் இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். இதுவரை 341 பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. 1900 பணியாளர்கள் தேவை. எனவே பணியில் சேர்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்க தயார்” என்று தெரிவிக்கப்பட்டது. 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார். 

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 20) தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுரேந்தர், சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய மறுத்துவிட்டார். 

சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர் நிறுவனத்துடன் கலந்து பேசி தூய்மை பணியாளர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share