தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அரசுடன் துணை நின்ற அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 24) தெரிவித்துள்ளார். Delimitation row Stalin thanked
தமிழக சட்டமன்றத்தில் இன்று நீர்வளத்துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “2026-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மேற்கொள்ளப்படவிருக்கிற தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்பதை சுட்டிக்காட்டி முன்கூட்டியே எச்சரிக்கை மணி அடித்து இந்தியாவிலேயே முதன் முதலாக நமது தமிழ்நாடு சட்டமன்றத்தில் 14.02.2024 அன்று ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம்.
அடுத்தக்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தை கடந்த 05.03.2025 அன்று கூட்டி இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்பிற்கும் தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பை கடுமையாக எதிர்த்தும், தற்போது இருக்கும் தொகுதி மறுவரையறை 2026-ல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உறுதியளிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நமது நியாயமான கோரிக்கைகளையும் அது சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்லவும் மத்திய அரசுக்கு மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் கூட்டு நடவடிக்கை குழு ஏற்படுத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றவும் அதற்கான முன்னெடுப்பில் மிகத்தீவிரமாக செயல்பட்டு 22.03.2025 அன்று கூட்டு குழுவின் முதல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட முக்கிய கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
விரிவான ஆலோசனைக்கு பிறகு 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மேலும் 25 ஆண்டுகள் நீட்டிக்கப்பட வேண்டும் என கூட்டாட்சி தத்துவம், ஜனநாயக உரிமை, அரசியல் பிரதிநிதித்துவ உரிமை ஆகியவற்றை பாதுகாப்பதில் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
தமிழ்நாடு முன்னெடுத்து செல்கின்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்த விழிப்புணர்வு தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்காக துணை நின்ற பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும், கூட்டு நடவடிக்கை குழுவில் பங்கேற்ற கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நியாயமான தொகுதி மறுசீரமைப்பை பெற்றிட தமிழ்நாட்டில் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பி-க்களை அழைத்து சென்று பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறோம்” என்று தெரிவித்தார். Delimitation row Stalin thanked