தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எம்.பி வில்சன் ஆகியோர் இன்று (மார்ச் 12) தமிழ்நாடு அரசு சார்பில் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். Minister Velu meets Jagan
மார்ச் 5-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், மக்களவை தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் கூட்டு நடவடிக்கை குழுவை கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஏழு மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய தலைவர்களை சந்திக்க திமுக அமைச்சர்கள் மற்றும் எம்.பி-க்கள் அடங்கிய குழுவை அமைத்தார் ஸ்டாலின். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கை நேற்று (மார்ச் 11) நேரில் சந்தித்து கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர்.
இதே பணிக்காக கர்நாடகாவுக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி, அப்துல்லா எம்பி மற்றும் ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் வில்சன் எம்பி ஆகியோர் இன்று சென்றிருந்தனர்.
இந்தநிலையில், ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியை அமைச்சர் வேலு மற்றும் வில்சன் எம்பி ஆகியோர் சந்தித்து தொகுதி மறுவரையறை கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர்.

இந்த சந்திப்பின் போது அமைச்சர் வேலு, ஜெகன் மோகன் ரெட்டியை சால்வை அணிவித்து கெளரவித்தார். பின்னர் திருவள்ளுவர் சிலை மற்றும் அழைப்பிதழ் வழங்கினார். இதனை தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் பல்லா சீனிவாச ராவை சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
தொடர்ந்து மேற்குவங்க முதல்வரை திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, கேரளா முதல்வரை ஐடி துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் சந்திக்க உள்ளனர். Minister Velu meets Jagan