விகிதாச்சார அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு முழுக்க முழுக்க குழப்பமாக உள்ளது என்று திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா இன்று (பிப்ரவரி 26) தெரிவித்துள்ளார். Raja question Amit Shah
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா,
“அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவுகளின் அடிப்படையில் 2002-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கான தொகுதி மறுசீரமைப்பு சட்டம் இப்போது மீண்டும் விவாதித்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, புதியதொரு மசோதாவை தாக்கல் செய்ய இருப்பதாக செய்திகள் வந்ததையொட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் 1971 ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தின்படி மறுசீரமைப்பு செய்ய வேண்டிய அவசியம் வந்தபோது, அதற்காக நாடாளுமன்றத்தில் தனி சட்டத் திருத்தம் இயற்றி, தள்ளிவைக்கப்பட்டது. அப்போது இருந்த ஒன்றிய அரசு மக்கள்தொகைக் கட்டுப்பாடு திட்டத்தை ஊக்குவித்தது.
குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அமல்படுத்தியதன் காரணமாக, வடமாநிலங்களுக்கும் தென் மாநிலங்களுக்கும் சமமற்ற நிலை நிலவுகின்றது. அதனால் தொகுதி மறுசீரமைப்பு 25 ஆண்டுகள் தள்ளி வைக்கலாம் என்று தள்ளி வைக்கப்பட்டது.

அதற்கு பிறகு 2004 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அந்த முடிவை ஏற்றுக்கொண்டு, மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது. மறுசீரமைப்பு என்பது மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே செய்ய முடியாது என்பதை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில்தான் நாடாளுமன்றம் சட்டம் இயற்றி தள்ளி வைத்தது. இதற்கு மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு மறுசீரமைப்பு செய்ய முடியாது என்பதை நாடாளுமன்றம் ஒப்புக்கொண்டதாகத்தான் பொருள் கொள்ள வேண்டும்.
இப்போது அப்படிப்பட்ட எந்த நிபந்தனைகளையும் இல்லாத நேரத்தில், மக்கள்தொகை அடிப்படையில் மட்டுமே தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால், மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களை செம்மையாக நிறைவேற்றி இருக்கிற தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் ஜனநாயகரீதியாக தங்களின் பிரதிநிதித்துவத்தை நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் இழக்கும் என்பதை உணர்ந்த முதலமைச்சர், அவ்வாறு நடக்கக் கூடாது என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
1971-ல் என்ன நிலைப்பாட்டை எடுத்தோமோ, அதுதான் தொடர வேண்டும் என கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்திற்குப் பதில் அளிக்கிற வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்றைக்கு கோவையில் பேசுகிற போது, விகிதாச்சார அடிப்படையில்தான் மறுசீரமைப்பு அமையும், அப்படி விகிதாசார அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யும் போது தமிழ்நாட்டிற்கு ஒரு தொகுதி கூட குறையாது என ஹிந்தியில் அறிவித்து இருக்கிறார்.
அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, ஒன்றிய அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், pro-rata என சொல்லப்பட்டு இருக்கிறது. அந்த pro-rata என்பது இப்போது இருக்கும் தொகுதிகளின் அடிப்படையில் உயருமா, அல்லது மக்கள் தொகை அடிப்படையில் உயருமா என்பதற்கு, எந்த பதிலும் இல்லை. அமித்ஷாவின் பேச்சு முழுக்க முழுக்க குழப்பமாக உள்ளது.
அந்த குழப்பதைத் தீர்ப்பதாக எண்ணிக் கொண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென நாடாளுமன்றத் தொகுதிகளின் விகித அடிப்படையில் எண்ணிக்கை உயரும் என்று உறுதியாக தெரிவித்து இருக்கிறார். இவ்வாறு உள்துறை அமைச்சர் சொல்லவில்லை. உள்துறை அமைச்சரின் பேச்சுக்கு அண்ணாமலை புதியதாக விளக்கம் கூறியுள்ளார். இந்த கருத்து தவறு.
எனவேதான், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டு மக்கள் உடன்பாடு அல்ல, தமிழக அரசிற்கு ஏற்புடையது அல்ல என்பதை முதலமைச்சர் தெள்ளதெளிவாகக் கடிதம் எழுதியுள்ளார்.
எங்களின் எண்ணிக்கைக் குறைய கூடாது என்பது மட்டுமல்ல. நீங்கள் கொண்டு வருகிற எந்தவொரு திட்டத்திலும் எங்களுக்கு அதே எண்ணிக்கையை வைத்துக்கொண்டு வடமாநிலங்களுக்கு மக்கள்தொகை அடிப்படையில் அதிகமாக கொடுத்தாலும், அது அநீதிதான் என்பதில் நாங்கள் மிக தெளிவாக இருக்கிறோம்.
pro-rata என்பது 1971-ல் எடுக்கப்பட்ட சென்செஸ் அடிப்படையில் இப்போது இருக்கிற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் அப்படியே உயர வேண்டும்.
மக்கள்தொகையை குறைக்க வேண்டும் என சொன்னது ஒன்றிய அரசாங்கம். அதைச் செய்த எங்களுக்கு மட்டும் ஏன் தண்டனை? என்கிற கேள்வி எழுகின்றது. மக்கள் தொகையை கட்டுப்படுத்தியிருக்கிறோம். திட்டங்கள் மூலம் முன்னேறி இருக்கிறோம். தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வந்துள்ளது. இதற்காக நமது பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டால், அது தண்டனை அல்லவா?
தமிழகத்தின் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்துள்ளதால், அதன் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், நமது குரல் நெறிக்கப்படும்” என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார். Raja question Amit Shah