வைஃபை ஆன் செய்ததும் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த டிலிமிட்டேஷன் கூட்டு நடவடிக்கை குழு தொடர்பான போட்டோக்களும், வீடியோக்களும் இன்பாக்சில் வந்து விழுந்தன. Delimitation JAC meeting M.K.Stalin
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறு வரையறை செய்யப்பட்டால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும் என்ற அடிப்படையில் கடந்த மார்ச் 5 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார் முதல்வர் ஸ்டாலின்.
அந்த கூட்டத்தில், இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்படும் தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் பஞ்சாப், மேற்கு வங்காளம், கேரளா ஆகிய மாநில முதல்வர்களை அழைத்து கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடத்தலாம் என்று பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட தலைவர்கள் யோசனை தெரிவித்தனர்.
இந்த அடிப்படையில் மார்ச் 22 ஆம் தேதி கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் என முடிவு செய்யப்பட்டு மேற்குறிப்பிட்ட மாநில முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்களை தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் கொண்ட டீம் தனித்தனியாக சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
அவர்களும் ஒப்புக்கொண்டு இன்று சென்னையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் மற்ற கட்சிகளின் பிரநிதிகளும் என சுமார் 25 பேர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் காணொலியில் உரையாற்றினார், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார். Delimitation JAC meeting M.K.Stalin

வந்த ஒவ்வொருவரையும் வரவேற்று உபசரிக்க சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார் ஸ்டாலின். அதாவது வருவதற்கு ஒப்புக் கொண்டு உறுதி செய்த முதல்வர் மற்றும் கட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது முதல் மீண்டும் அவர்கள் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்படுவது வரை அவர்களை கவனித்துக் கொள்ள சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஒவ்வொரு விருந்தினருக்கும் ஒரு எம்.பி,. மற்றும் காவல்துறை சார்பில் ஒரு பி.எஸ்,ஓ, அவரவர் தாய்மொழி அறிந்த ஒரு அதிகாரி ஆகியோர் அமர்த்தப்பட்டனர். ஒவ்வொருவருக்கும் வாகன வசதியோடு எஸ்கார்ட் வண்டியும் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த எஸ்கார்டு வண்டிக்கு ஒரு டிரைவர் ஒரு மாற்று டிரைவர் உள்ளிட்ட இரு டிரைவர்கள் அமர்த்தப்பட்டனர்.
விமான நிலையத்தில் விருந்தினரை எம்பி. அல்லது அமைச்சர் கொண்ட டீம் வரவேற்றனர். கூட்டம் நடந்த ஐடிசி சோழாவில் ஒவ்வொருவருக்கும் அறை புக் செய்யப்பட்டது. அங்கேயே அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். இன்று காலை வந்த ஒரே விருந்தினர் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்தான். மற்ற அனைவரும் நேற்று (மார்ச் 21) இரவே வந்துவிட்டனர். கேரள முதல்வர் மார்ச் 20 ஆம் தேதியே சென்னை வந்துவிட்டார். Delimitation JAC meeting M.K.Stalin
இந்நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு சோழா ஹோட்டலுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்… விருந்தினர்கள் ஒவ்வொருவரையும் அவர்களது அறைக்கே சென்று வரவேற்றார். அனைவருக்கும் தனது அழைப்பை ஏற்று வந்தமைக்கு நன்றி தெரிவித்தார்.
அதன் பின் கூட்டம் முறையாக தொடங்குவதற்கு முன்பு தீர்மானங்கள் பற்றிய ஆலோசனைக்காக சிறிது நேரம் ஒரு மினி மீட்டிங் நடந்தது. அப்போதுதான் தமிழ்நாட்டின் பண்பாட்டு, கலாச்சார அடையாளங்களை பிரதிபலிக்கும் பிரத்யேக பொருட்களான பத்தமடை பாய், காஞ்சிபுரம் கைத்தறிப் பட்டு, கொடைக்கானல் மலைப்பூண்டு, கோவில்பட்டி கடலைமிட்டாய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசுப் பெட்டகத்தை விருந்தினர்கள் ஒவ்வொருவருக்கும் அளித்தார் ஸ்டாலின்.

இந்நிலையில் காலை உணவுக்குப் பின் கூட்டம் 10.30 மணி வாக்கில் தொடங்கியது. திமுக துணைப் பொதுச் செயலாளாரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழிதான் தொகுத்து வழங்கி நிகழ்வை நடத்தினார். Delimitation JAC meeting M.K.Stalin
இந்நிகழ்விலும் பல ஆச்சரியங்கள் விருந்தினர்களுக்கு காத்திருந்தன. அவரவர் மேசையில் அவர்களது பெயர் ஆங்கிலத்திலும், அவர்களது தாய்மொழியிலும் எழுதப்பட்டிருந்தது. அதாவது தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை எடுத்தியம்புவதாக இது இருந்தது. அடுத்ததாக முதல்வரின் பேச்சு அனைவருக்கும் ஆங்கிலத்திலும் அவரவர் தாய்மொழியிலும் மொழிபெயர்ப்பு நகல் கொடுக்கப்பட்டது. மேலும், கலந்துகொண்டவர்களின் தாய்மொழியில் கேட்கும் அளவுக்கு மொழி பெயர்ப்பு டெக்னாலஜியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முதல்வர் ஸ்டாலின் தொடக்க உரைக்குப் பின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மறு வரையறை பற்றிய பவர் பாயின்ட் ப்ரசன்டேஷன் செய்தார். அதன் பின் ஒவ்வொரு தலைவராக பேசினார்கள். ஏற்கனவே ஆலோசனையின் பேரில் இறுதி செய்யப்பட்ட தீர்மானங்களை கனிமொழி முன்மொழிய அதை ஒரு மனதாக அனைவரும் நிறைவேற்றினர். திமுக பொருளாளரும் மக்களவை திமுக தலைவருமான டி.ஆர்.பாலு நன்றி கூறினார்.

கூட்டத்துக்குப் பிறகும் ஒவ்வொருவரையும் சந்தித்து நன்றி கூறினார் ஸ்டாலின். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அடுத்த கூட்டத்தை தான் நடத்துவதாக முதல்வரிடம் வேண்டுகோள் வைத்தார். அதேபோல் பஞ்சாப்பிலும் நடத்த வேண்டும் என்று அம்மாநில முதல்வர் வேண்டுகோள் வைத்தார். அடுத்தடுத்து அனைத்து மாநிலங்களிலும் இக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று பங்கேற்றவர்களுக்கு ஒரு ஊக்கத்தை கொடுத்தது இந்தக் கூட்டம்.
ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாகவும், ஒவ்வொரு மாநில உணர்வையும் மதிக்கும் வகையில் மொழிபெயர்ப்பு வசதிகளும், அவரவர் மாநில உணவு வரைக்கும் லஞ்ச்சில் இடம்பெற்றிருந்ததையும் விருந்தினர்கள் ஸ்டாலினிடம் வியந்து போய் சொன்னார்கள்.
நாம் இந்தக் கூட்டத்தை நடத்துவதே மாநில உணர்வுகளை மதிக்க வேண்டும் என்பதற்காகத்தான்… அந்த அடிப்படையில்தான் வருகிற விருந்தினர்களின் தனிப்பட்ட மாநில உணர்வை மதித்து ஏற்பாடுகளை செய்தோம் என்று அவர்களிடம் முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.
நிகழ்ச்சி முடிந்ததும் இன்று மாலை முக்கிய அதிகாரிகளிடம் முதல்வர் இதுபற்றி பேசியிருக்கிறார் அப்போது அவர்கள், ‘தமிழ்நாட்டை ஆட்சி செய்த ஒவ்வொரு முதல்வரும் ஒவ்வொரு சாதனையை தேசிய அளவில் செய்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த கூட்டம், இந்த முன்னெடுப்பு உங்களது உச்சபட்ச சாதனை. Delimitation JAC meeting M.K.Stalin

இந்த டிலிமிட்டேஷன் விவகாரத்தில் பிரதமர் மோடி இனி என்ன முடிவெடுத்தாலும் அது இந்த கூட்டத்தின் விளைவை கருதிதான் இருக்கும்’ என்று கூறியிருக்கிறார்கள்.
முதல்வரும் இன்று மகிழ்ச்சியாக இருந்திருக்கிறார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.