டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : பெற்றோர் அதிர்ச்சி!

Published On:

| By Minnambalam Login1

delhi school bomb threat

டெல்லியில் ஏறத்தாழ 40 பள்ளிகளுக்கு இன்று (டிசம்பர் 9) வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

சமீப காலமாக நமது நாட்டில் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம் நூற்றுக்கும் அதிகமான விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் மர்ம நபர்களால் விடப்பட்டன. விசாரணையில் இவை அனைத்தும் போலி என கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மாதிரி வெடிகுண்டு மிரட்டல்கள் விமானங்களுக்கு மட்டும் விடப்படவில்லை. பள்ளிகளுக்கும் விடப்பட்டுள்ளன.

டெல்லியில் கடந்த மே 1 ஆம் தேதி சுமார் 200 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்பட்டன. விசாரணையில் அனைத்தும் போலி என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு தொடர்பாக வாட்ஸப்பில் வரும் வெடிகுண்டு தொடர்பான ஆடியோக்களை நம்ப வேண்டாம் என்று டெல்லி போலீஸ் பொதுமக்களுக்கு தெரிவித்தது.

கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி டெல்லி ரோஹிணி பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளி அருகே வெடிசத்தம் கேட்டது. இதனால் அருகே இருந்த கார் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இந்த சம்பவத்தை நேஷனல் செக்யூரிட்டி கமாண்டோக்கள் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான் டெல்லியில் உள்ள மதர்ஸ் இண்டர்நேஷனல், ஆரோபிந்தோ மார்க், மண்டி ஸ்கூல் உள்ளிட்ட 40 பள்ளிகளுக்கு நேற்று (டிசம்பர் 8) இரவு 11.38 மணிக்கு scottielanza@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

மேலும் =E2=80=9CKNR=E2=80=9D என்ற அமைப்பு தான் இந்த மிரட்டலுக்கு பின் உள்ளது என்றும், வெடிகுண்டுகளை வெடிக்கவைக்காமல் இருக்க 30,000 டாலர்கள் பள்ளிகள் தரவேண்டும் என்றும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகள் வகுப்புகளை ரத்து செய்துவிட்டு, மாணவர்களை அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்துவிட்டன.

இது தொடர்பாக டெல்லி தீ அணைப்புத் துறை அதிகாரி கூறுகையில் ” ஜிடி கோயன்கா பஸ்ச்சிம் விஹார் பள்ளியில் இருந்து இன்று காலை 6.15 மணிக்கும், டிபிஎஸ் ஆர்கே புரம் பள்ளியில் இருந்து காலை 7.06 மணிக்கும் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக எங்களுக்கு தகவல் வந்தது.

உடனடியாக வெடிகுண்டு கண்டுபிடிக்கும் டீம், தீ அணைப்பு வீரர்கள், உள்ளூர் போலீஸ் ஆகியோர் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று சோதனை நடத்தினர்.” என்றார்.

போலீஸ் நடத்திவருகிற விசாரணையில் இது வரை எந்த வித வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கவில்லை.

இந்த நிலையில் டெல்லி முதல்வர் அதிஷி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் “டெல்லியில் தினசரி நடந்துவரும் கொலை, துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களுக்குப் பிறகு, பள்ளிகளுக்கு இப்போது வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.

டெல்லியில் சட்டம்-ஒழுங்கு இவ்வளவு மோசமாக இதற்கு முன்பு இருந்ததில்லை. டெல்லி மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் மத்திய பாஜக அரசு தோல்வியடைந்துள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.

டெல்லி இந்தியாவின் தலைநகரமானதால், அதனின் சட்ட ஒழுங்கு, போலீஸ் மற்றும் நிலத் துறைகளை மத்திய அரசுதான் நிர்வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

“டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் முதல்வர் பொறுப்பில் இருக்க மாட்டேன்” – ஸ்டாலின்

பாகிஸ்தான் போலீசில் முதன்முறையாக இந்து… யார் இந்த ராஜேந்திர மேவார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share