பிரயாக்ராஜ் மகா கும்பமேளா நிகழ்வில் பங்கேற்க புதுடெல்லி ரயில் நிலையத்தில், சனிக்கிழமை இரவு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பெண்கள், நான்கு ஆண்கள், 5 குழந்தைகள் என மொத்தம் 18 பேர் உயிரிழந்தனர். delhi railway station stampede
மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் (எல்என்ஜேபி) மருத்துவமனை மற்றும் லேடி ஹார்டிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி உட்பட பலக்கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
அதேவேளையில் ’இந்தத் துயரச்சம்பவம் மீண்டும் ரயில்வேத்துறையின் தோல்வியையும், அரசுகளி்ன் அலட்சியத்தையும் காட்டுகின்றது’ என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளனர்.

அதே வேளையில் நாட்டில் தொடர்ந்து ரயில் விபத்துகள் நடந்து வரும் நிலையில் மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ்வை மாற்ற வேண்டும் என சமூகவலைதளங்களில் கோரிக்கை எழுந்து வருகிறது.
இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும், சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ரயில்வேத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ரயில்வே வாரியத்தின் தகவல் மற்றும் விளம்பர நிர்வாக இயக்குநர் திலீப் குமார் கூறுகையில், “நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. பயணிகள் சிறப்பு ரயில்களில் அனுப்பப்பட்டனர். ரயில் நிலையத்தில் ரயில் போக்குவரத்து இயல்பாக உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த இரண்டு நபர் உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த துயர் சம்பவத்தையடுத்து ரயில்வே ஏடிஜி பிரகாஷ் அளித்த பேட்டியில், “உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரயில்வே காவல்துறைக்கு மாநிலம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், குறிப்பாக கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரயாக்ராஜ் நோக்கிச் செல்லும் அனைத்து ரயில்களையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். இப்போது எந்த விதமான பிரச்சனையும் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.