ராஜன் குறை
சென்ற வாரம் கலைஞர் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களை மாநில அரசு அறிவித்தது. ஆனால் அவர் பிறந்த தினத்தன்று நிகழ இருந்த அரசு விழாக்கள் அனைத்தும் ஒரிசாவில் நடந்த கோர ரயில் விபத்தினால் தள்ளிப்போடப்பட்டன. இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் முன்னால் இன்னொரு அபூர்வமான நிகழ்வு நடந்தது.
அது என்னவென்றால் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால், அதே கட்சியின் பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான், டெல்லி அமைச்சரவையில் முக்கிய பங்கு வகிக்கும் ஆடிஷி உள்ளிட்டோர் அடங்கிய குழு முதல்வர் ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து ஒன்றிய அரசின் அவசரச் சட்டம் ஒன்றுக்கு எதிராக ஆதரவு கேட்டனர்.
இதற்கு முன்பு அர்விந்த் கேஜ்ரிவால் பல்வேறு மாநில முதல்வர்களையும் சந்தித்து ஆதரவு கேட்டிருந்தார். ஏனெனில் அவசர சட்டம் மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்படாமல் தடுக்க அனைத்து மாநிலக் கட்சிகளின் ஒத்துழைப்பும் தேவை.
இந்த அவசரச் சட்டம், உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் வழங்கிய முக்கிய தீர்ப்பினை செயலிழக்கச் செய்யும் பொருட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. அது என்ன தீர்ப்பு என்றால், டெல்லி அரசாங்கத்தில் பணியாற்றும் இந்திய ஆட்சிப் பணி, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அந்த அரசின் எல்லைக்குட்பட்டு பணி மாற்றம் செய்தல், அவர்கள் பணிகளைக் கட்டுப்படுத்துதல் தொடர்பானது.
இந்த பிரச்சினையில், டெல்லியின் லெஃப்டினண்ட் கவர்னர் தனக்குத்தான் அதிகாரிகளின் பணி மாற்றப் பிரச்சினைகளில் அதிகாரம் இருக்கிறது என்று கூறி வருகிறார். ஒன்றிய அரசின் பிரதிநிதியாக விளங்கும் அவர்தான் அதிகாரிகளைக் கட்டுப் படுத்த முடியும் என்பதே ஒன்றிய அரசின் நிலைபாடாக இருக்கிறது.
இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வாகும் அதிகாரிகளுக்குத் தேவையான பயிற்சி அளிக்கப்பட்ட பின் அவர்கள் பல்வேறு மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவார்கள். ஓர் அதிகாரி தமிழ்நாடு கேடர் என்று நியமிக்கப்பட்டுவிட்டால், அவரை எங்கே பணியில் அமர்த்துவது, மாற்றுவது, அவர் பணியினை மேற்பார்வையிடுவது, தேவைப்பட்டால் அவர் மேல் நடவடிக்கை எடுப்பது ஆகிய எல்லா உரிமைகளும் தமிழ்நாடு அரசுக்கு வந்துவிடும்.
ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு ஒரு சில அதிகாரிகளை ஒன்றிய அரசு மீண்டும் கோரிப் பெறலாம். மாநில அரசின் விருப்பம், அந்தக் குறிப்பிட்ட அதிகாரியின் விருப்பம் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டுதான் அவ்விதமான பணி மாற்றத்தைச் செய்வார்கள். மற்றபடி அந்த அதிகாரிகளின் பணி முழுக்கவும் மாநில அரசுக்குக் கட்டுப்பட்டுத்தான் இருக்கும்.
ஆனால், டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசும், முதல்வரும் இருந்தாலும் அந்த அரசால், முதல்வரால் அதிகாரிகளின் பணிகளைக் கட்டுப்படுத்த முடியாது. அவர்களைப் பணி மாற்றம் செய்ய முடியாது. இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள்தான் அரசு இயந்திரத்தைக் கட்டுப்படுத்துபவர்கள். இவர்களே மக்கள் பிரதிநிதிகளின் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் அரசு இயந்திரத்தை எப்படி இயக்க முடியும், எப்படி மக்களாட்சி நடைபெறும் என்பதே கேள்வி.
டெல்லி அரசினை பொறுத்தவரை ஒரு பெரிய சிக்கல் என்னவென்றால் அது ஒரு மாநிலமா அல்லது ஒன்றிய பிரதேசமா என்பதுதான். இந்தியாவில் இப்போது 29 மாநிலங்களும், 9 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன.
அவற்றையும், டெல்லியையும் தவிர பிற யூனியன் பிரதேசங்கள் மிகவும் சிறியவை. புதுச்சேரியிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை இருந்தாலும், அது பன்னிரண்டு லட்சம் குடிநபர்களை மட்டுமே கொண்ட சிறிய பிரதேசமாகும்.
ஆனால், டெல்லியின் பரிமாணங்கள் முற்றிலும் வேறுபட்டவை. டெல்லியின் மக்கள் தொகை ஒரு கோடியே அறுபத்தி மூன்று லட்சமாகும். இமாசல பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட பல இந்திய மாநிலங்களின் மக்கள் தொகை இதைவிட குறைவானது.
ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக உள்ள 120 சுதந்திர நாடுகளின் மக்கள் தொகை இதைவிட குறைவானது. இவ்வளவு பெரிய மக்கள் தொகுதியின் சுயாட்சி வடிவம் எப்படியிருக்க வேண்டும் என்பதே முக்கிய பிரச்சினையாக எழுந்துள்ளது.

டெல்லியின் வரலாறு
பல்வேறு அரசர்களின் தலைநகரமாக தொன்றுதொட்டே டெல்லி விளங்கியதாகக் கருதப்பட்டாலும், பதிமூன்றாம் நூற்றாண்டில் சுல்தான்களின் தலைநகரமாக மாறியதிலிருந்துதான் அதன் நவீன அடையாளம் தொடங்குகிறது. அதற்கு சாட்சியாக குதுப் மினார் போன்ற நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ளன. அதனைத் தொடர்ந்து மொகலாயப் பேரரசின் தலைநகரமாகவும் இது விளங்கியது.
ஆங்கிலேயர்கள் தங்கள் தலைமையகத்தை கல்கத்தாவிலே கொண்டிருந்தாலும், 1911ஆம் ஆண்டு டெல்லியை தலைநகராக மாற்றிக்கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து சுதந்திர இந்தியாவின் தலைநகராகவும் டெல்லி விளங்கி வருகிறது.
சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் நான்கு வகையான மாநிலங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் ஒன்றிய அரசின் மேற்பார்வைக்கு உட்பட்ட C பிரிவு மாநிலமாக டெல்லி அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரம்ம பிரகாஷ் என்பவரும் குர்முக் நிகால் சிங் என்பவரும் 1952 முதல் 1955 வரை முதல்வர்களாக இருந்தார்கள். அதன் பின் 1956ஆம் இந்திய மாநிலங்கள் மறுவரை செய்யப்பட்டபோது மாநிலங்கள் அல்லது ஒன்றிய பிரதேசங்கள் என்ற இரண்டு வரையறைகள் மட்டுமே உருவானது.
டெல்லி ஒன்றிய பிரதேசமாக அறிவிக்கப்பட்டதால் முதல்வர் பதவி ஒழிக்கப்பட்டது. சட்டமன்றமும் கிடையாது, முதல்வரும் கிடையாது. ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் லெப்டினன்ட் கவர்னரே நகரை ஆட்சி செய்வார். அவருக்கு உதவி புரிய ஒரு கவுன்சில் இருந்தது. ஆனால் அதன் உறுப்பினர்களுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் கிடையாது. ஆலோசனைகள் மட்டுமே வழங்கலாம். அதனைத் தவிர டெல்லி மாநகராட்சி என்ற உள்ளூர் நிர்வாக அமைப்பு இருந்தது.
மீண்டும் பிறந்த தேசிய தலைநகர் பிரதேச அரசு
புதிய மாநிலங்கள் வரையறையில் டெல்லி யூனியன் பிரதேசமாக வரையறுக்கப்பட்ட 1956ஆம் ஆண்டுக்குப் பிறகு, டெல்லி நகரம் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வந்தது. அதன் மக்கள் தொகையும் பெருகியது. உலகின் பெரிய நகரங்களில் ஒன்றாக டெல்லி மாறியது. அப்போதுதான் மீண்டும் இவ்வளவு பெரிய மக்கள் தொகுதிக்கு ஒரு சுயாட்சி அரசு வேண்டாமா, தனிப்பட்ட நிர்வாகம் வேண்டாமா என்ற கேள்வி எழுந்தது.
இது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், 1991ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் 69ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அது டெல்லியை தேசிய தலைநகர் பிரதேச அரசு என்ற பெயரில் வரையறுத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றமும், அமைச்சரவையும், முதலமைச்சரும் உருவாக வகை செய்தது. ஆனால் மற்ற மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்களில் மூன்று டெல்லி அரசுக்குக் கிடையாது என்றும் விதிவிலக்கு அளித்தது.
அந்த மூன்று மாநிலங்களின் அதிகாரங்கள் பட்டியல் ஒன்று, இரண்டு, பதினெட்டு ஆகிய எண்கள் கொண்ட மூன்று அம்சங்கள். ஒன்று, பொது ஒழுங்கு. இரண்டு, காவல்துறை. மூன்று நிலத்தின் மீதான உரிமை. இதன் பொருள் என்னவென்றால் சட்டம் ஒழுங்கும், காவல்துறையும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். நிலத்தின் மீதான உரிமையும் ஒன்றிய அரசுக்கே உண்டு. ஏனெனில் இது ஒன்றிய பிரதேசம் என்பதால்.
இப்படியாக மாநில அரசாகவும் முழுமையாக இல்லாமல், ஒன்றிய பிரதேசமாகவும் இல்லாமல் இரண்டும் கெட்டானாக டெல்லியில் மக்களாட்சி அரசு அமைந்தது எனலாம். இந்த அரசுக்கும், மாநகராட்சிக்கும் என்ன வித்தியாசம் என்பதும் கூட ஒரு கேள்விதான். கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் மாநகராட்சியைவிட கூடுதல் அதிகாரங்கள் உள்ளன என்று கூறலாம். ஆனால் சட்டம் ஒழுங்கும், காவல் துறையும் தன் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு மக்களாட்சி அரசு எப்படி ஆட்சி புரியும் என்பதே குழப்பம்தான்.

டெல்லியில் அமைந்த ஆட்சிகள்
இந்த புதிய தேசிய தலைநகர் பிரதேச அரசு உருவானவுடன் நடந்த தேர்தலில் 1993ஆம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சியே வெற்றி பெற்றது. அப்போது ஒன்றிய அரசில் நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அந்த 1993-1998 இடையிலான ஐந்து ஆண்டுகளில் மதன்லால் குரானா, சாஹிப் சிங் வர்மா, சுஷ்மா சுவராஜ் ஆகிய மூன்று பாஜக முதல்வர்கள் ஆட்சி செய்தனர்.
அதன் பிறகு 1998ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஷீலா தீட்சித் முதல்வரானார். இவர் தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வென்று பதினைந்து ஆண்டுக் காலம் டெல்லியின் முதல்வராக விளங்கினார். இந்த காலகட்டத்தில் டெல்லி பெரும் வளர்ச்சி கண்டது. ஆனால் ஆட்சியின் இறுதிப் பகுதியில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும், அதிருப்தியும் பெருகியது.
டெல்லியில் 2011ஆம் ஆண்டு பொது வாழ்க்கையில் ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே என்பவர் ஒரு சத்தியாகிரக போராட்டத்தைத் தொடங்கினார். ஊழல் செய்பவர்களை விசாரித்து தண்டிக்க லோக் ஆயுக்தா என்ற அமைப்பும், புதிய சட்டமும் உருவாக்கப்பட வேண்டும் என்று கோரினார். அவருக்கு ஊடகங்களின் ஆதரவும், பொது மக்களின் ஆதரவும் பெருகியது.
அந்தப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த அர்விந்த் கேஜ்ரிவால், பிரசாந்த் பூஷண், மனிஷ் சிசோடியா, யோகேந்திர யாதவ் ஆகியோருடன் சேர்ந்து பின்னாளில் ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கினார். ஆம் ஆத்மி கட்சி நடுத்தர வர்க்கத்தினரின் கட்சியாக இருந்தாலும், 2013 தேர்தலில் அடித்தட்டு மக்களின் ஆதரவைப் பெற்றது. ஆட்சியமைத்தது.
அந்த ஆட்சி கலைக்கப்பட்டாலும், அதைத் தொடர்ந்து 2015, 2020 ஆகிய ஆண்டுகளிலும் மோடி அலையை எதிர்த்து ஆம் ஆத்மி பெரும் வெற்றி பெற்றது. பாஜக 2014, 2019 ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல்களில் வென்று ஆட்சியமைத்தாலும் டெல்லியில் அதனால் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை.
இது போதாதென்று, ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மாநிலத்திலும் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. குஜராத் தேர்தலிலும் பாரதீய ஜனதா கட்சிக்கு நெருக்கடி கொடுத்தது. மத்தியதர வர்க்க அரசியல் நோக்குக்கு அனுசரணையான ஆம் ஆத்மி கட்சி பாஜகவுக்கு வேறுவிதமான மாற்றாக தன்னை முன்னிறுத்திக் கொள்வதால் பாஜகவின் கடும் சினத்தை எதிர்கொள்ள நேர்கிறது. ஆம் ஆத்மி அமைச்சர்கள் மீது பல்வேறு வழக்குகளைப் போட்டு சிறையில் அடைத்துள்ளது பாஜக அரசு.
தொடர்ந்து அர்விந்த் கேஜ்ரிவால் அரசுக்கு மாநில ஆளுநரின் மூலம் பல்வேறு முட்டுக்கட்டைகள் போட்டு வந்தது. பல்வேறு அம்சங்களில் டெல்லி மாநில அரசின் உரிமைகள் என்ன, அதிகாரங்கள் என்ன என்பதும், ஒன்றிய அரசின் பிரதிநிதியான ஆளுநரின் அதிகாரங்கள் என்ன என்பதிலும் தெளிவான வரையறை இல்லாததால் ஏராளமான பிரச்சினைகள் நாள்தோறும் வெடித்தன. அதில் முக்கியமானது இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நியமனம் குறித்தது. அதிகாரிகள் மாநில அரசுக்கு எதிராகத் தூண்டிவிடப்பட்டனர்.

சட்டப் போராட்டம்
இந்த நிலையில்தான் டெல்லி ஆம் ஆத்மி அரசு தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தங்கள் ஆட்சி உரிமைகளுக்கான சட்டப் போராட்டத்தை நடத்தி வந்தது. பல்வேறு நிலைகளைக் கடந்து இறுதியாக ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு சென்ற மாதம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது.
டெல்லி அரசென்பது பிற மாநில அரசுகளிலிருந்து பொது ஒழுங்கு, காவல்துறை, நில உரிமை ஆகியவற்றில் வேறுபட்டிருந்தாலும் மற்ற எல்லா அம்சங்களிலும் மாநில அரசுக்கான உரிமைகளைக் கொண்டது என்பதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அப்படியானால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த அரசுக்கு அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் உரிமை இருந்தால்தான் அதனால் தன் பணியைச் செய்ய முடியும் என்பதை தெளிவுபடுத்தி, இந்த மூன்று அம்சங்களைத் தவிர்த்த பிற எல்லா துறைகளிலும் அதிகாரிகளை டெல்லி அரசே கட்டுப்படுத்தும் எனத் தீர்ப்பளித்தது.
ஒன்றிய அரசு உடனே ஓர் அவசரச் சட்டம் இயற்றியுள்ளது. அதில் அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசிடமிருந்து பறிக்கும் விதமாக, ஆளுநருக்கே அந்த அதிகாரத்தை வழங்கும்படியாக விதிகளை வகுத்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை முறியடிக்கும் நோக்கத்திலேயே இதைச் செய்துள்ளது.
இன்றைக்கு இது டெல்லி என்ற வித்தியாசமான மாநிலத்தின் பிரச்சினையாக இருந்தாலும், ஒன்றிய அரசு ஏற்கனவே பல மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் தலையீடுகளை நிகழ்த்தி வருவதைப் பார்க்கும்போது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கு விடப்பட்ட சவாலாகவே இந்த அவசரச் சட்டத்தை பார்க்க வேண்டியுள்ளது.
அதன் காரணமாகவே ஷரத் பவார், மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ் உள்ளிட்ட பல மாநில முதல்வர்கள் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினும் அர்விந்த் கேஜ்ரிவாலின் போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினை அரவிந்த் கேஜ்ரிவாலின், ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சினை மட்டுமல்ல. அதற்கு வாக்களித்த ஒன்றரை கோடி டெல்லி மக்களின் சுயாட்சி உரிமை சார்ந்த பிரச்சினையாகும். இந்தியாவில் மாநில சுயாட்சி போராட்டத்தின் மற்றொரு முக்கிய அத்தியாயமே டெல்லி மாநிலத்தின் சுயாட்சி உரிமைக்கான போராட்டம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
டிஜிட்டல் திண்ணை: திமுகவுடன் தொடர்பு… அதிமுக மாசெக்கள் மாற்றத்துக்குத் தயாராகும் எடப்பாடி
