வைஃபை ஆன் செய்ததும், ‘நித்தம் நித்தம் ஒரு நாடகம்’ என சொல்லியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
என்னய்யா செங்கோட்டையன் விவகாரமா?
ஆமாம்பா.. போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையனை நீக்குவதற்கு முன்னர் டெல்லி பாஜக மேலிடத் தரப்பில் இருந்து சில விஷயங்களைக் கேட்டு காத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என நாம் டிஜிட்டல் திண்ணையில் நேற்று (செப்டம்பர் 10) சொல்லியிருந்தோம்..
டெல்லி மெசேஜ் வந்துருச்சா?
நாம் சொன்னது போல டெல்லியில் இருந்து மெசேஜ் வந்துவிட்டது.. அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்தது பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு விரிவாகவே தகவல் அனுப்பி வைத்துள்ளதாம் டெல்லி.
அந்த தகவல்களை நம்மிடம் அதிமுக சீனியர் தலைவர் ஒருவர் பகிர்ந்து கொண்டார், அதாவது, “டெல்லியில் அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்தது உண்மைதான். ஆனால் இந்த சந்திப்பு ஒரு சீரியசான விஷயமே இல்லை.. ஏன்னா துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ந் தேதி நடந்தது.. அதற்கு முன்னதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வீட்டில்தான் அமித்ஷா உள்ளிட்டோர் முகாமிட்டிருந்தனர். பாஜக கூட்டணி கட்சிகளுக்கான தேர்தல் அலுவலகம் போல பியூஷ் கோயல் வீடு பரபரத்துக் கொண்டிருந்தது.
அப்பதான் அமித்ஷாவை செங்கோட்டையன் சந்திக்க வந்தார். அமித்ஷாவும் பிஸியாகவே இருந்ததால் செங்கோட்டையன் நீண்ட நேரம் காத்திருந்தார்.
பின்னர் செங்கோட்டையனை அழைத்து அமித்ஷா என்ன விவரம் என கேட்டார். செங்கோட்டையன், அதிமுகவில் நடக்கும் பிரச்சனைகளை சொல்லிவிட்டு எல்லோரும் எடப்பாடிக்கு எதிராக இருக்கின்றனர் என விவரித்தார்.
செங்கோட்டையன் இப்படி பேசிக் கொண்டிருந்த போதுதான், நேபாள விவகாரமும் பெரிதாகி டிவி சேனல்களில் பிரேக்கிங் நியூஸாக ஓடிக் கொண்டிருந்தது..
இதனால் அமித்ஷாவின் கவனம் முழுவதும் துணை ஜனாதிபதி தேர்தல், நேபாள விவகாரம் என்றே இருந்தது.. செங்கோட்டையன் சொன்னதை மேலோட்டமாக உள்வாங்கிக் கொண்டாரே தவிர பெரிதாக காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.
ஒரு கட்டத்தில் “எல்லோரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்தியுங்க” என பொத்தாம் பொதுவாகவே சொல்லி செங்கோட்டையனை அனுப்பி வைத்துவிட்டார் அமித்ஷா.
இவ்வளவுதான் டெல்லியில் நடந்தது.. அதிமுக- பாஜக கூட்டணிக்கு சிக்கல் வரும் அளவுக்கு இது ஒரு மேட்டரே இல்லை.. இதை எல்லாம் பெரிசா பேசவும் வேண்டியதும் இல்லை என தெள்ளத் தெளிவாக விளக்கிவிட்டது டெல்லி” என்கின்றனர்.
அப்ப செங்கோட்டையனை நீக்கமாட்டாரா எடப்பாடி?
அப்படி சொல்லவும் முடியாது.. ஏன்னா இந்த விவகாரத்துல புது ட்விஸ்ட், பஞ்சாயத்து ஒன்னும் அடுத்ததாக வரலாம் என நினைக்கிறாராம் எடப்பாடி.
அது என்னப்பா புது பஞ்சாயத்து?
“செங்கோட்டையனை இயக்கிக் கொண்டிருக்கிற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் சென்னைக்கு வருகிறார். அடுத்த சில நாட்களில் நிர்மலா மேடம் வந்து என்ன செய்யப் போகிறார்? யாரை எல்லாம் சந்திப்பார்? செங்கோட்டையனை மீண்டும் சந்திக்க நேரம் தருவாரா? என்பதை எல்லாம் வைத்துதான் எடப்பாடி அடுத்த கட்ட முடிவையே எடுப்பார். அதுவரைக்கும் இப்படிதான் என்ன நடக்குமோ? ஏது நடக்குமோன்னு? டென்ஷன் நீடிக்கும்” என அதிமுக வட்டாரங்கள் சொல்வதாக டைப் செய்துவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.
