டெல்லி மதுபான வழக்கில் கவிதாவுக்கு தொடர்பா? – ஆம் ஆத்மி விளக்கம்!

Published On:

| By indhu

Liquor policy case: Supreme Court refuses to grant bail to Kavita

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவிற்கு தொடர்புடையதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்ட நிலையில், அதற்குப் பதிலளித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் இன்று (மார்ச் 19) அறிக்கை வெளியிட்டுள்ளது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரகர் ராவின் மகளும் பிஆர்எஸ் மூத்த தலைவருமான கவிதாவை அமலாக்கத்துறை கடந்த மார்ச்  15-ஆம் தேதி கைது செய்தது.

இதற்கு முன்னர், ஐதராபாத்தில் உள்ள கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் இணைந்து சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் பிடிபட்டதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக, கவிதா கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து தெலுங்கானாவில் பாரதீய ராஷ்டிரிய சமதி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில், கவிதா கைது செய்யப்பட்டு இருப்பது தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கவிதா கைது செய்யப்பட்டு 3 நாட்களான நிலையில், அமலாக்கத்துறை வெளியிட்ட செய்தியில், “ஆம் ஆத்மியின் தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா உள்பட முக்கிய தலைவர்கள் மற்றும் பிறருடன் சேர்ந்து கவிதா சதித் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, டெல்லி மதுபான கொள்கை முறைப்படுத்துதல் மற்றும் அமல்படுத்துவதில் இவருக்கு தொடர்புள்ளது.

மதுபான கொள்கை முறைப்படுத்துதல் மற்றும் அமல்படுத்துதலில், ஆம் ஆத்மியின் தலைவர்களுக்கு ரூ.100 கோடி வழங்கியதில் கவிதாவிற்கு தொடர்புள்ளது.

2021-22 ஆண்டுக்கான டெல்லி மதுபான கொள்கை முறைப்படுத்தல் மற்றும் அமல்படுத்துதலில் ஆம் ஆத்மி கட்சிக்கு சட்டவிரோதமாக நிதிகள் பெருமளவில்  வந்து குவிந்துள்ளன.

இதுவரை டெல்லி, ஐதராபாத், சென்னை, மும்பை உள்பட இந்தியா முழுவதும் 245 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

ஆம் ஆத்மியின் தலைவர்களான மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் மற்றும் விஜய் நாயர் உள்ளிட்ட 15 பேர் வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும், இதுவரை ரூ.128.79 கோடி மதிப்பிலான சொத்துகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளன” என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமலாக்கத்துறைக்கு பதிலளித்து ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசு அப்பட்டமான பொய்களை வெளியிட்டு வருகிறது. அமலாக்கத்துறை, பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் பிரிவாகச் செயல்படுகிறது.

இதற்கு முன்னதாகவும் பல இடங்களில் அமலாக்கத்துறை,பாஜகவின் அரசியல் பிரிவாக செயல்பட்டுள்ளது. இதனைக் குறிப்பிட்டு காட்டும் வகையில் தற்போது கவிதா தொடர்பான வழக்கில், பொய்யான மற்றும் அற்பமான அறிக்கையை அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது.

இது அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியாவின் மீதான ஒரு அவநம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சியாகும். ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்த இதுபோன்ற அறிக்கைகள் வெளியிடப்படுகிறது

உண்மை மற்றும் ஆதாரம் எதுவும் இல்லாத இந்த அமலாக்கத்துறையின் அறிக்கையில், 500க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், எந்தவொரு ஆதாரமும் இந்த வழக்கில் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்த விவகாரத்தில் ரூ.100 கோடி பணம் இருப்பதாக அமலாக்கத்துறை கூறியதை உச்சநீதிமன்றமே நிராகரித்துவிட்டது. இதன்மூலம், மதுபான கொள்கை முறைகேடு வழக்கு போலியானது என்பதை இப்போது இந்த உலகம் அறிந்திருக்கும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்த வழக்கில் தொடர்புடைய ஆதாரங்களை கண்டறிய அமலாக்கத்துறை முயன்று வருகிறது. மணீஷ் சிசோடியாவின் வீடு உட்பட பல ஆம் ஆத்மி தலைவர்களின் வீடுகளில் சோதனையும் நடத்தப்பட்டது.

அந்த சோதனைகளில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால், பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்களை வழங்கிய அனைத்து நிறுவனங்களும் இதற்கு முன்னதாக அமலாக்கத்துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவை என்பது தற்போது நமக்குத் தெரியவந்துள்ளது.

அதாவது, பணம் மோசடி செய்ததாக அமலாக்கத்துறையால் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனங்கள், சோதனை நடத்தப்பட்டவுடன், தங்கள் குற்றங்களில் இருந்து வந்த  வருமானத்தை பாஜக கணக்குகளுக்கு மாற்றியுள்ளன.

இதுகுறித்து விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவர வாய்ப்பிருக்கிறது.” என ஆம் ஆத்மி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தமிழிசை ராஜினாமா ஏற்பு: தெலங்கானா புதுச்சேரிக்கு புதிய ஆளுநர் யார்?

அண்ணாமலைக்கு எதிராக பெண் தொழிலதிபர்: கோவையில் திமுகவின் திட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share