உதயநிதி மீது டெல்லியில் 4 பிரிவுகளின் கீழ் புகார்!

Published On:

| By christopher

சனாதன தருமத்திற்கு எதிராக பேசியதாக கூறி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லியைச் சேர்ந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் 4 பிரிவுகளின் கீழ் இன்று (செப்டம்பர் 3) புகார் செய்துள்ளார்.

சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நேற்று ’சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது.  இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.

ADVERTISEMENT

அப்போது அவர், சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே சிறந்தது என்றும்,  டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற தொற்று நோய்களை எதிர்க்க போராட மாட்டோம். ஒழித்துக்கட்டத் தான் முயற்சிப்போம். அதுபோல தான் சனாதனத்தையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் மாநில அரசியலைக் கடந்து தேசிய அளவிலும் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது. தேசிய அளவில் பாஜகவை சேர்ந்தவர்கள் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

அதற்கு “நான் எந்த சட்ட சவாலையும் சந்திக்க தயாராக உள்ளேன். இது போன்ற காவி மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். திராவிட மண்ணில் சனாதனத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எங்களது தீர்மானத்தில் இருந்து ஒரு துளி கூட பின்வாங்க மாட்டோம்” என்று உதயநிதி கூறியிருந்தார்.

இந்த நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி போலீசில் இன்று புகார் கொடுத்துள்ளார்.

ADVERTISEMENT

அவர் தனது புகாரில், “ உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சில் சனாதன தருமத்திற்கு எதிராக ஆத்திரமூட்டும் மற்றும் இழிவான வகையில் பேசியுள்ளார்.

சனாதன தருமத்தை கொசுக்கள், டெங்கு, கொரோனா மற்றும் மலேரியாவுடன் ஒப்பிட்டு அதனை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி கூறியிருப்பது, இந்து தருமத்தைப் பின்பற்றுபவர்களை இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்து ஊக்குவிக்கும் நோக்கில் உள்ளது.

உதயநிதி வார்த்தைகள் சனாதன தருமத்தின் மீது அவர் கொண்டுள்ள வெறுப்பையே காட்டுகிறது. தமிழ்நாடு அரசில் எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் உள்ள அவர், நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயல்படுவதாகவும், அனைத்துப் பகுதிகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்றும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டாலும், சனாதன தர்மத்தை ஆத்திரமூட்டும் மற்றும் அவதூறான பேச்சை வேண்டுமென்றே வெளியிட்டுள்ளார்.

இது இந்து மற்றும் சனாதன தருமத்தை பின்பற்றி வரும் எனது மத உணர்வுகளை புண்படுத்துகிறது. எனவே உதயநிதி ஸ்டாலின் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 153 ஏ மற்றும் பி, 295 ஏ, 298 மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் ” என்று தனது புகாரில் வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

வாழ்வா சாவா ஆட்டத்தில் வங்காள தேசம்… வரிந்துகட்டும் ஆப்கானிஸ்தான்…

விமர்சனம் : பரம்பொருள்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share