மதுபான வழக்கு: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Published On:

| By Selvam

மதுபான ஊழல் வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரி பிஆர்எஸ் மூத்த தலைவரும், தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்தரசேகர் ராவ் மகளுமான கவிதா தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 8) தள்ளுபடி செய்துள்ளது.

டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கவிதாவை கடந்த மார்ச் 15-ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இதனையடுத்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கவிதாவுக்கு  மார்ச் 26-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை கஸ்டடி வழங்கப்பட்டது. தற்போது டெல்லி திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் அவர் உள்ளார்.

இந்த வழக்கில் இடைக்கால ஜாமீன் கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் கவிதா மனுத்தாக்கல் செய்தார். நீதிபதி காவேரி பவேஜா முன்பு இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.

கவிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனுசிங்வி ஆஜராகி, “பிஎம்எல்ஏ சட்டத்தின் பிரிவு 45-ன் கீழ் பெண்களின் அடிப்படை கொள்கைகள், விருப்புரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். கவிதாவின் 16 வயது மகனுக்கு அடுத்த மாதம் முதல் தேர்வு நடைபெற உள்ளதால், அவரது மகனை கவனிக்க கவிதாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர் சோகேப் ஹூசைன், “இந்த வழக்கில் கவிதா முக்கிய பங்கு வகித்துள்ளார். இதற்கான ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் உள்ளது. மேலும், தனது செல்போனில் உள்ள ஆதாரங்களை அழிக்க கவிதா முயற்சி செய்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் முன்னணி அரசியல்வாதியாக இருக்கும் கவிதாவுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைக்கக்கூடும். அதனால் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது” என்று வாதிட்டார்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இடைக்கால ஜாமீன் கோரி கவிதா தாக்கல் செய்த மனுவை நீதிபதி காவேரி பவேஜா இன்று தள்ளுபடி செய்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புதிய வரலாற்று சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்!

நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share