அப்படி என்ன இருக்கு புதன் கிழமையில?  டெல்லி தேர்தல் தேதியில் இப்படி ஒரு விசேஷம்!

Published On:

| By Aara

பொண்ணு கெடைச்சாலும் புதன் கிடைக்காது என்று நம்மூரில் பழமொழி சொல்லுவார்கள். அதையேதான் டெல்லி தேர்தலுக்காக இந்திய தேர்தல் ஆணையரும் வேறு வகையில் சொல்லியிருக்கிறார்.

நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் மாநில சட்டமன்றத்துக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடக்க இருக்கிறது.  இதற்கான தேர்தல் அறிவிப்பை  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று (ஜனவரி 7) டெல்லியில் அறிவித்தார்.

இதன்படி பிப்ரவரி 5 ஆம் தேதி புதன் கிழமை தேர்தல் நடைபெற இருக்கிறது.  வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.

பிப்ரவரி 5 ஆம் தேதி வாரத்தின் மையப் பகுதியான புதன்கிழமையாக இருக்கிறது. இதற்கான சுவாரஸ்யமான காரணத்தையும்  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சொல்லியிருக்கிறார்.

“2025 ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்றத் தேர்தலில் புதன்கிழமை வாக்குப்பதிவை நடத்துவது என்ற முடிவு வேண்டுமென்றேதான் எடுக்கப்பட்டது. மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலையும் புதன் கிழமையில்தான் நடத்தினோம்.  அதுபோல், புதன்கிழமை வாக்குப்பதிவை நாங்கள் வேண்டுமென்றே தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

அனைத்து டெல்லி வாக்காளர்களும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.  அதனால்தான் புதன் கிழமையில் வாக்குப் பதிவு வைத்துள்ளோம். வீக் எண்டில் வாக்குப் பதிவை வைத்தால் தேர்தல் லீவோடு வார இறுதியின் தொடர் நாட்களை லீவு போட்டுவிட்டு நகர்ப்புற வாக்காளர்கள் வாக்களிப்பதைத் தவிர்க்கிறார்கள். இதை கவனித்துதான் ஓடவும் ஓளியமுடியாத வகையில்  வாரத்தின் மையப் பகுதியான புதன் கிழமையில்  தேர்தலை வைத்துள்ளோம்.

வாக்களிப்பதில் நகர்ப்புற மக்கள் காட்டும் அக்கறையின்மை கவலைப் பட வேண்டியதாக இருக்கிறது” என்று புதன் கிழமை தேர்தலுக்குக் காரணம் கூறினார் ராஜீவ் குமார்.,

மகாராஷ்டிர தேர்தல் 2024 நவம்பர் 20 ஆம் தேதி புதன் கிழமை நடைபெற்றது. அங்கே பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதுவரையிலான மகாராஷ்டிர வரலாற்றில் இல்லாத அளவுக்கு  எதிர்க்கட்சித் தலைவரே இல்லாத சட்டமன்றமாக பாஜக அணி பெரும் வெற்றி பெற்றது.

அதனால்தான் மகாராஷ்டிராவை போன்றே டெல்லியிலும் புதன் கிழமை சென்டிமென்ட் பாஜக உயர் மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதன்படியே தேர்தல் ஆணையம் மூலம் புதன் கிழமையில் தேர்தல் நடத்தப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் சொல்கிறார்கள்.

தலைமை தேர்தல் ஆணையர் சொல்வதைப் போல புதன் கிழமையில் தேர்தல் வைத்தால் வாக்குப் பதிவு அதிகரிக்கும் என்ற கோணத்தில் பார்த்தால்… மகாராஷ்டிர சட்டமன்றத்தில் 66% வாக்குகளே பதிவானது என்பது குறிப்பிடத் தக்கது.

எனவே இது தேர்தல் ஆணையத்தின் உத்தியா… பாஜகவின் சென்டிமென்ட்டா என்ற கேள்வியும் விவாதமாகியுள்ளது.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கருப்பு சட்டை-வெள்ளை மாஸ்க்… சட்டமன்றத்தில் அதிமுகவின் அதிரடி என்ட்ரி!

எடப்பாடிக்கு செக்? உறவினர் வீட்டில் தொடரும் ஐடி ரெய்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share