ஜாமீனை நீட்டிக்க போராடிய அரவிந்த் கேஜ்ரிவால்… மீண்டும் திகார்!

Published On:

| By Aara

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கேஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்துக்காக உச்ச நீதிமன்றம் கொடுத்த பெயில் காலம் முடிந்து… ஜூன் 2 ஆம் தேதி மீண்டும் திகார் சிறைக்கு செல்கிறார்.

கடந்த மார்ச் 21 இல் டெல்லி மதுபான ஊழல் வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.அவர் சிறையில் அடைக்கப்பட்டது தேர்தல் காலம். ’எனது தேர்தல் பிரச்சாரத்தை முடக்குவதற்காக கைது செய்திருக்கிறார்கள். தேர்தல் பணிகள் மேற்கொள்ள தனக்கு பிணை அளிக்க வேண்டும்’ என்று அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பை மீறி … தேர்தல் பிரச்சாரத்துக்காக மட்டுமே என்று அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மே 10 ஆம் தேதி ஜாமீன் அளித்தது. இது சட்ட வட்டாரங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.

அரவிந்த் கேஜ்ரிவாலின் ஜாமீன் விடுதலையே பாஜகவுக்கு அரசியல் ரீதியாக அடியாகவும், இந்தியா கூட்டணிக்கு உரமாகவும் அமைந்தது.

உச்ச நீதிமன்றம் அளித்த ஜாமீனில் வெளியே வந்த கேஜ்ரிவால் டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சிக்காகவும், இந்தியா கூட்டணிக்காகவும் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கினார்.

“மோடி ஆட்சி மீண்டும் அமையுமானால் இப்போது நான் கைது செய்யப்பட்டதைப் போல மம்தா பானர்ஜி, ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்களும் கைது செய்யப்படுவார்கள்” என்று பேசிய அரவிந்த் கேஜ்ரிவால்… அடுத்தடுத்து பாஜக மீது குண்டுகளை வீசினார்.

மோடிக்கு 75 வயது ஆகும் நிலையில், அவர் பாஜகவின் விதிகளின்படி பிரதமர் பதவியில் தொடர முடியாது. அப்படி ஒரு நிலை வந்தால் அமித் ஷா தான் பிரதமராக வர திட்டமிட்டிருக்கிறார் என்று கேஜ்ரிவால் பேச, இது பாஜகவுக்குள் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியது.

அதுவரை பாஜக கிளப்பும் சர்ச்சைகளுக்குத்தான் எதிர்க்கட்சிகள் பதில் சொல்லி வந்தன. அப்போது தான் கேஜ்ரிவால் கிளப்பிய சர்ச்சைக்கு பாஜக பதில் சொல்லும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு ஜாமீனில் வெளியே வந்த கேஜ்ரிவால் இந்தியா கூட்டணியின் வலிமையான பிரச்சார பீரங்கியாக மாறினார்.

இந்த நிலையில் மீண்டும் திகார் சிறைக்கு செல்வதை தவிர்ப்பதற்காக சட்ட ரீதியான போராட்டத்தை மீண்டும் தொடங்கினார் கேஜ்ரிவால்.

தேர்தல் பிரச்சாரத்துக்காக மட்டுமே உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்திருந்தது. ஆனபோதும் அந்த ஜாமீனை உடல் நலம் கருதி ஒரு வார காலம் நீட்டிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார் அரவிந்த் கேஜ்ரிவால்.

கேஜ்ரிவால் தனது மனுவில், “கைது செய்யப்பட்ட காலத்தில் 6 முதல் 7 கிலோ வரை எனக்கு எடை இழப்பு ஏற்பட்டது. பிணையில் விடுதலையான பிறகும் என்னால் உடல் எடையை அதிகரிக்க முடியவில்லை.

திடீர் மற்றும் விவரிக்க முடியாத எடை இழப்பு, சிறுநீரக பாதிப்பு, தீவிர இதய நோய்கள் மற்றும் புற்றுநோயைக் குறிக்கலாம், மேலும் நோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய உயிருக்கு ஆபத்துகளைத் தடுக்க முன்கூட்டியே கண்டறிதல் அவசியம்.

மே 25 அன்று மேக்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மூத்த மருத்துவர் உடல்நலப் பரிசோதனை செய்து, உடல் முழுவதும் பிஇடி-சிடி ஸ்கேன் உட்பட பல மருத்துவப் பரிசோதனைகளை பரிந்துரைத்தார். இந்த சோதனைகள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்யப்பட வேண்டும், இதற்கு ஐந்து முதல் ஏழு நாட்கள் தேவைப்படும்.

மேற்குறிப்பிட்ட மருத்துவ சோதனைகள் செய்துகொள்ளாவிட்டால் எனது உயிருக்கு ஆபத்து. அதனால் ஜூன் 3 முதல் ஜூன் 7 வரை அனைத்து சோதனைகளையும் செய்து ஜூன் 9 அன்று சரணடையத் தயாராக இருக்கிறேன்” என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார் அரவிந்த்

ஆனால், உச்ச நீதிமன்ற பதிவாளர் இந்த வழக்கை அவசர வழக்காக பட்டியலிட மறுத்துவிட்டார். அமலாக்கத்துறையின் கைதுக்கு எதிராக கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற பெஞ்ச், தீர்ப்பை மே 17 ஆம் தேதி ஒத்தி வைத்திருக்கிறது.

இதை சுட்டிக்காடிய உச்ச நீதிமன்ற பதிவாளர், பிணை நீட்டிப்பு மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என்று கேஜ்ரிவாலின் வழக்கறிஞருக்கு தெரிவித்தார். மேலும், ‘கேஜ்ரிவால் தேவைப்பட்டால் விசாரணை நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனு செய்யலாம்’ என்று உச்ச நீதிமன்ற பெஞ்ச் ஏற்கனவே தெரிவித்திருப்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

இதையடுத்து தனது சட்டப் போராட்டத்தின் அடுத்த கதவைத் தட்டினார் கேஜ்ரிவால். எப்படியாவது ஜூன் 2 ஆம் தேதி மீண்டும் திகார் சிறைக்கு சென்றுவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்த கேஜ்ரிவால், தன் மீதான ஒரிஜினல் வழக்கின் விசாரணை நீதிமன்றமான டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களை தாக்கல் செய்தார்.

அமலாக்கத்துறை வழக்கில் வழக்கமான ஜாமீன் கோரி ஒரு மனுவும்… மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால ஜாமீனை ஏழு நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி இரண்டாவது மனுவையும் தாக்கல் செய்தார் அரவிந்த் கேஜ்ரிவால்.

சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை ஜூன் 1 ஆம் தேதி நடந்தது.
அமலாக்கத்துறை சார்பில் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ ஆஜரானார். அவர் அரவிந்த் கேஜ்ரிவாலின் இரு மனுக்களையும் கடுமையாக எதிர்த்தார்.

“கேஜ்ரிவால் ஜூன் 2 ஆம் தேதி சரணடைய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை விசாரணை நீதிமன்றம் மாற்றியமைக்க முடியாது. மேலும், இடைக்கால ஜாமீன் பெற வேண்டுமானால் கெஜ்ரிவால் சிறையில் இருக்க வேண்டும். அவர் இப்போது சிறையில் இல்லை. எனவே இடைக்கால ஜாமீன் மனு ஏற்கத்தக்கது அல்ல.

பிஎம்எல்ஏவின் 45வது பிரிவின் கீழ் ஜாமீன் வழங்குவதற்கான நிபந்தனைகள் கடுமையாக இருக்கின்றன. சட்ட ரீதியாக அரவிந்த் கேஜ்ரிவாலின் ஜாமீன் மனு ஏற்கத் தக்கது அல்ல” என்று வாதாடிய அமலாக்கத்துறை வழக்கறிஞர், அடுத்து கேஜ்ரிவால் தாக்கல் செய்த மருத்துவ காரணங்களுக்கான ஜாமீன் மனுவையும் எதிர்த்தார்.

“இன்று இவ்வளவு பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று அவகாசம் கேட்கும் அரவிந்த் கேஜ்ரிவால் இத்தனை நாட்களாக மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பதிலாக, பிரச்சாரம் மற்றும் ரோடு ஷோக்களை தான் நடத்தி வந்தார்.

அவர் சிறையில் இருந்தபோது ஒரு கிலோ எடை கூடியுள்ளார். அவர் 7 கிலோ எடையை குறைத்துள்ளார் என்ற அவரது வாதம் தவறானது” என்றார்.

மருத்துவப் பரிசோதனைகள் மூலம் நீதிமன்றத்தை ஏமாற்ற கேஜ்ரிவால் விரும்புவதாகவும் ராஜூ குற்றம் சாட்டினார். கேஜ்ரிவாலுக்கு ஏதேனும் பரிசோதனைகள் செய்ய வேண்டியிருந்தால், சிறையில் உள்ள கேஜ்ரிவாலுக்கு வசதிகள் செய்து தரப்படும் என்றும், தேவைப்பட்டால் எய்ம்ஸ் அல்லது வேறு ஏதேனும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் என்றும் அவர் கூறினார்.

அரவிந்த் கேஜ்ரிவால் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ஹரிஹரன், “ உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதன் நோக்கமே கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதால்தான். பிரச்சாரத்தின்போது மன அழுத்தத்துக்கு ஆளானார். அதன் பின் ​​சர்க்கரை அளவைக் கண்காணித்ததில், சர்க்கரை அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், கேஜ்ரிவாலின் கீட்டோ அளவும் வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது, இது அவரது சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்பதைக் குறிக்கிறது. மருத்துவப் பரிசோதனை செய்யாமல் கேஜ்ரிவால் சிறைக்குச் சென்றால், அவர் தன்னைத்தானே ஆபத்தில் ஆழ்த்திக்கொள்வதற்கு சமம்” என்று வாதாடினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி காவேரி பவேஜா, இந்த வழக்கின் தீர்ப்பு ஜூன் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

எனவே உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜூன் 2 ஆம் தேதி காலை அரவிந்த் கேஜ்ரிவால் மீண்டும் திகார் சிறைக்கு செல்வது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

இன்று இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால், ஜூன் 2 ஆம் தேதி திகார் சிறைக்குத் திரும்புகிறார். ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே அவரது சிறைவாசம் தொடருமா முடியுமா என்று தெரியும்.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல்: டி.ஆர்.பாலு தகவல்!

சந்தைக்கு வந்த தாய்ப்பால்… எங்கே போகிறது தமிழ்நாடு? ஷாக் ரிப்போர்ட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share