சீனர்களுக்கு விசா வழங்க கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில், அவருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று (ஜூன் 6) உத்தரவிட்டது.
விசா விவகாரம்
பஞ்சாப் மாநிலம் மான்ஸா என்னும் இடத்தில் தால்வாண்டி சாபோ மின் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்கான ஒப்பந்த பணிகளை சீனாவின் ஷான்டாங் எலெக்ட்ரிக் பவர் கன்ஸ்ட்ரக் ஷன் கார்ப் என்ற நிறுவனம் மேற்கொண்டது.
இதை செயல்படுத்த 260 சீனர்கள் இந்தியா வருவதற்கு விசா வழங்கப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் விசா வழங்க காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும், வழக்கில் முதல் குற்றவாளியாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார்.
ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்
ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்து இருந்தது. தொடர்ந்து, இந்த வழக்கில் இருந்து ஜாமீன் வழங்கக்கோரி கார்த்தி சிதம்பரம் டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று (ஜூன் 6) டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த விசாரணையின்போது அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடர்பான ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டது. இரு தரப்பிலும் வாதங்கள் நடைபெற்றது.
விசாரணையின் முடிவில் எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Gold Rate: சட்டென உயர்ந்த தங்கம், வெள்ளி விலை – எவ்வளவு தெரியுமா?