மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். இதையடுத்து அவர் டெல்லி திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கடந்த மார்ச் 21 ஆம் தேதி இரவு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத்துறையால் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ஒன்பது முறை அவருக்கு சம்மன் அனுப்பியும் அதை அவர் நிராகரித்த காரணத்தால், நீதிமன்ற அனுமதிக்குப் பின் அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர் அமலாக்கத்துறையினர்.
மார்ச் 22 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் முதலில் ஆறு நாட்கள் அமலாக்கத்துறை கஸ்டடி கொடுத்தது. மீண்டும் அது நான்கு நாட்கள் நீட்டிக்கப்பட்டது.
அமலாக்கத்துறை கஸ்டடி முடிந்ததும் இன்று (ஏப்ரல் 1) டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நீதிபதி காவேரி பவேஜா முன்னிலையில் அமலாக்கத்துறையினர் அரவிந்த் கேஜ்ரிவாலை ஆஜர்ப்படுத்தினார்கள்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ஏஎஸ்ஜி) எஸ்.வி. ராஜு,, “விசாரணைக்கு அரவிந்த் கேஜ்ரிவால் ஒத்துழைக்கவில்லை. மழுப்பலான பதில்களை அளித்து வருகிறார். அவர் தனது டிஜிட்டல் சாதனங்களின் கடவுச்சொற்களை தர மறுக்கிறார்” என்று கூறி அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப கோரிக்கை வைத்தார்.
“நீங்கள் வைக்கும் இந்த வாதங்களுக்கும் அவரை நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?” என்று கேட்டார் நீதிபதி.
அதற்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ, “பிற்காலத்தில் அவருக்கு ED கஸ்டடி பெறுவதற்கான உரிமையை நாங்கள் வைத்திருக்கிறோம். அவரது கஸ்டடி விசாரணைக்கான தேவை இன்னும் முடியவில்லை. மீண்டும் கஸ்டடி கேட்பதற்கான எங்களது உரிமை தொடர்பாக, ஏற்கனவே செந்தில்பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி நடந்துகொள்கிறோம். அதனால், இப்போது அரவிந்த் கேஜ்ரிவாலை நீதிமன்ற காவலில் வைக்க கோருகிறோம்” என்று அமலாக்கத்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை டெல்லி முதல்வரை திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி.
https://twitter.com/ani_digital/status/1774686280099471402
அமலாக்கத்துறை கஸ்டடியில் இருந்து திகார் சிறைக்கு மாற்றப்படுவதற்கு முன்பு அவரது மனைவி சுனிதா கேஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள் அதிஷி மற்றும் சவுரப் பரத்வாஜ் ஆகியோரை சந்திக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அவர்களிடம் உரையாடினார் கேஜ்ரிவால்.
நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, ‘பிரதமர் செய்துகொண்டிருப்பது நாட்டுக்கு நல்லதல்ல’ என்று பதிலளித்தார் அரவிந்த் கேஜ்ரிவால்.
–வேந்தன்
கச்சத்தீவு… தேர்தலுக்காக மீனவர்கள் மீது மோடிக்கு திடீர் பாசம்: ஸ்டாலின் விமர்சனம்!
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!