மும்பையில் இன்று (மார்ச் 5) நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீழ்த்தியது.
மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் நேற்று நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் பிரம்மாண்ட கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
அதனைதொடர்ந்து இரவு நடைபெற்ற முதல் போட்டியில் குஜராத் ஜியாண்ட்ஸ் அணியை 143 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்தது ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி.
இந்நிலையில் இன்று மாலை 3.30 மணிக்கு மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியும், மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணியும் மோதின.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி கேப்டன் மெக் லானிங் மற்றும் ஷபாலி வர்மா ஜோடி ஆரம்பம் முதலே வெளுத்து வாங்கினர்.
இருவரும் போட்டிப் போட்டு பவுண்டரி, சிக்சருமாக அடித்ததில் டெல்லி அணியின் ரன் வேகம் ஜெட் வேகத்தில் பயணத்தது.
லானிங், ஷபாலி இருவரும் அதிரடியாக அரைசதம் அடிக்க, டெல்லி அணி 10 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது.

முதல் விக்கெட்டுக்கு 162 ரன்கள் குவித்த நிலையில் க்னைட் பந்துவீச்சில் 72 ரன்கள் குவித்த லானிங் அவுட் ஆனார். அதே ஓவரில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷபாலி வர்மாவும் 84 ரன்களில் ஆட்டமிழந்தார்.
எனினும் அடுத்து வந்த மரிசேன் கேப் 39 ரன்களுடனும், ஜெமிமா 22 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் விளையாடினர்.
இதனால் 20 ஓவர் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது.
இதன்மூலம் மகளிர் பிரீமியர் லீக் முதல் சீசனில் 200 ரன்களுக்கு மேல் குவித்த 2ஆவது அணி என்ற பெருமையையும், அதிக ரன்கள் குவித்த முதல் அணி என்ற சாதனையையும் டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணி படைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து 224 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி களமிறங்கியது.
இதில் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷோஃபி டிவைன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்தது. டிவைன் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து கேப்டன் ஸ்மிருதி மந்தனா 23 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த வீராங்கனைகளில் எல்லிஸ் பெரி (31) ஹீதர் நைட் (34) மற்றும் மேகன் ஸ்கட்(30*)ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர்.

ஆனால் மற்ற வீராங்கனைகள் மிக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
டெல்லி கேபிடல்ஸ் அணியில் 5 விக்கெட் வீழ்த்தி வெற்றியில் பெரும் பங்கு வகித்த அமெரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் டாரா நாரிஸ் ஆட்ட நாயகி பட்டம் வென்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
கீழடி அருங்காட்சியகம்: திறந்து வைத்து பார்வையிட்டார் முதலமைச்சர்