“தலைநகரா? இல்லை விஷவாயு அறையா?” – டெல்லியின் மூச்சுத் திணறல் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் ஆபத்து!

Published On:

| By Santhosh Raj Saravanan

இந்தியாவின் இதயம் என்று வர்ணிக்கப்படும் டெல்லி, இன்று ஒரு “கேஸ் சேம்பர்” (Gas Chamber) ஆக மாறிவிட்டது. டிசம்பர் 2025-ல் காற்றின் தரக்குறியீடு (AQI) 450-ஐ தாண்டி, ‘மிகவும் ஆபத்தான’ (Severe Plus) நிலையை எட்டியுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிவிட்டன. ஆனால், இது டெல்லி மக்களின் பிரச்சனை மட்டுமல்ல; இது இந்தியாவின் பொருளாதாரத்திற்கும், கௌரவத்திற்கும் விடுக்கப்பட்டிருக்கும் சவால்.

1. ஆரோக்கியத்தின் மீது விழுந்த அடி: வெறும் மூச்சுத் திணறல் மட்டுமல்ல, டெல்லியின் நச்சுக்காற்று மக்களின் ஆயுட்காலத்தையே குறைத்து வருகிறது. சிகரெட் பிடிக்காதவர்களையும் நுரையீரல் புற்றுநோய் தாக்குகிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, இந்தக் காற்று மாசு மக்களின் கண்களையும் பாதிக்கிறது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஒரு நாட்டின் தலைநகரிலேயே சுத்தமான காற்று இல்லை என்பது, நாட்டின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பின் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

2. பொருளாதாரம் ஆட்டம் காணும்: “மாசுக்கும் பொருளாதாரத்திற்கும் என்ன சம்பந்தம்?” என்று நினைக்கலாம். ஆனால், உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) அறிக்கையின்படி, காற்று மாசினால் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் சுமார் 95 பில்லியன்டாலர் (சுமார் 7 லட்சம் கோடி ரூபாய்) இழப்பு ஏற்படுகிறது.

  • செயல்திறன் குறைவு (Productivity Loss): ஊழியர்கள் அடிக்கடி நோய் வாய்ப்படுவதால் அலுவலக விடுப்பு அதிகரிக்கிறது. அலுவலகம் வந்தாலும், சோர்வு காரணமாக வேலைத்திறன் குறைகிறது.
  • மூளையிளப்பு (Brain Drain): டெல்லியில் உள்ள பல உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் திறமையான இளைஞர்கள், “உயிரோடு இருந்தால் போதும்” என்று வெளிநாடுகளுக்கோ அல்லது வேறு நகரங்களுக்கோ இடம் பெயரத் தொடங்கி விட்டனர்.

3. உலக அரங்கில் இந்தியாவின் பிம்பம்: சமீபத்தில் சிங்கப்பூர் தூதரகம், டெல்லியில் உள்ள தங்கள் நாட்டு மக்களுக்கு “மாஸ்க் அணியுங்கள், வெளியே வராதீர்கள்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இது உலக அரங்கில் இந்தியாவின் பெயருக்குப் பெரிய களங்கம்.

ADVERTISEMENT
  • சுற்றுலா பாதிப்பு: டிசம்பர் மாதம் வெளிநாட்டுப் பயணிகள் அதிகம் வரும் சீசன். ஆனால், இந்த நச்சுப் புகையைப் பார்த்துப் பயந்து, பல சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்கின்றனர்.
  • முதலீடுகள்: வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய யோசிக்கின்றன. “தலைநகரிலேயே அடிப்படை வசதியான காற்று இல்லையா?” என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மத்தியில் எழுகிறது.

4. அவசரநிலை(GRAP-4): தற்போது டெல்லியில் GRAP-4 கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. கனரக வாகனங்கள் நுழையத் தடை, கட்டுமானப் பணிகளுக்குத் தடை எனப் பல கெடு பிடிகள். ஆனால், இவை தற்காலிகத் தீர்வுகளே. அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர்க்கழிவுகள் (Stubble Burning) மற்றும் வாகனப் புகை ஆகியவற்றிற்கு நிரந்தரத் தீர்வு காணாமல், ஒவ்வொரு வருடமும் குளிர்காலத்தில் பள்ளிகளை மூடுவது ஒரு தீர்வாகாது.

முடிவுரை: டெல்லியின் இருமல் சத்தம், கன்னியாகுமரி வரை கேட்க வேண்டும். ஏனெனில், இது ஒரு நகரத்தின் பிரச்சனை அல்ல; இது ஒரு தேசிய அவசர நிலை. பொருளாதார வளர்ச்சியில் 5 டிரில்லியன் டாலர் கனவை நோக்கி ஓடும் இந்தியா, முதலில் தன் மக்களுக்குச் சுத்தமான காற்றை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், நாம் சம்பாதிக்கும் பணம் அனைத்தும் மருத்துவமனை பில்களுக்கே சரியாக இருக்கும்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share