ஏர் இந்தியா விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஏர் இந்தியா 171 போயிங் விமானம் கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
இதில் விமான ஊழியர்கள் மற்றும் பயணிகள் என மொத்தம் 241 பேர் கொல்லப்பட்டனர். விமானம் மருத்துவ மாணவர்கள் விடுதி மீது மோதியதில் அங்கிருந்த மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் 19 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் மொத்தம் 260 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த ஜூலை 26ஆம் தேதி இறந்த 229 பயணிகளில் 147 பேரின் குடும்பங்களுக்கும், விடுதியின் மீது மோதியதில் உயிரிழந்த 19 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீட்டை ஏர் இந்தியா நிறுவனம் வழங்கியது.
எனினும் முழுமையான இழப்பீடு வழங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து ஏர் இந்தியா விபத்தில் பலியான அமெரிக்கர்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர் மைக் ஆண்ட்ரூஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ANI செய்தி நிறுவனத்திடம் ஆண்ட்ரூஸ் அளித்த பேட்டியில், “அமெரிக்காவில் கூட ரத்தன் டாடா யார், அவரது குணம் என்ன என்பது எங்களுக்குத் தெரியும். அவரது பணி நெறிமுறைகள் மற்றும்தனது ஊழியர்களை கவனித்துக்கொள்வதில் அவர் காட்டிய முக்கியத்துவம் பற்றி நாங்கள் அறிவோம். ரத்தன் டாடா மட்டும் இன்று உயிருடன் இருந்திருந்தால், அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருக்காது” என்று அவர் கூறினார்.
மேலும் அவர், “நாங்கள் ஒரு குடும்பத்தைச் சந்தித்தோம், வயதான தாய் படுக்கையில் இருக்கிறார், மேலும் அவர் தனது உடல்நலப் பராமரிப்புக்காக வருமானத்தை வழங்க தனது மகனைச் சார்ந்து இருந்தார். அந்த மகன் விபத்தில் இறந்துவிட்டார். இன்றுவரை அந்த தாய்க்கு பணம் கிடைக்கவில்லை. அவர் என்ன செய்ய வேண்டும்? தன் வாழ்க்கைக்காக இப்போது அவர் உலகின் தயவில் விடப்பட்டுள்ளார்” என்று ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.
