பணம் தராமல் அலைக்கழிப்பு : PVR நிறுவனத்துக்கு எதிராக திரும்பும் விநியோகஸ்தர்கள்!

Published On:

| By christopher

distributors turn against pvr cinemas for delay payment

இந்திய சினிமாவில் திரையரங்குகளில் படத்தை திரையிட்டு கிடைக்கும் வருமானத்தில் தயாரிப்பாளருக்கு கிடைக்கும் சதவீதம் தனி திரையரங்குகள் மூலமே அதிகமாக இருக்கும். மல்டிபிளக்ஸ், மால் திரையரங்குகள் மூலம் குறைவான சதவீத வருவாய் மட்டுமே கிடைக்கும்.

இந்திய சினிமா பாக்ஸ் ஆபீஸ் வசூலில் தனி திரையரங்குகளின் வருவாய் ஆதிக்கம் செலுத்தி வந்ததற்கு முடிவு கட்டிய பெருமை மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கே உரியது.

திரையரங்கு தொழிலில் கார்ப்பரேட் நிறுவனங்கள் முதலீடு செய்து நவீனப்படுத்திய போது அதனை ஆதரித்து, ஊக்குவித்தவர்கள் திரைப்பட தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் தான்.

புதிய படங்கள் வெளியாகும் போது மால் தியேட்டர்களுக்கு முதல் மரியாதை கொடுத்து அவர்களை தேடி சென்று படத்திற்கு திரைகள் ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைப்பார்கள்.

முன் தொகை இல்லை என்றாலும் பரவாயில்லை திரை ஒதுக்கீடு செய்தால் போதும் என்ற நிலையில் படங்களை திரையிட ஒப்பந்தம் செய்வார்கள். ஆனால் தனித் திரையரங்குகள் முன்தொகை கொடுத்து படத்தை திரையிட ஒப்பந்தம் செய்ய வருபவர்களை காக்க வைத்து அதிகபட்ட சதவீத பங்கு தொகை அடிப்படையில் படங்களை திரையிட ஒப்பந்தம் செய்வார்கள்.

எந்த கார்ப்பரேட் நிறுவன திரைகளை தயாரிப்பாளர்கள் சிவப்பு கம்பளம் விரித்து, வளர்த்து விட்டார்களோ, அந்த நிறுவனங்கள் ஆக்டோபஸாக வளர்ந்து தற்போது விநியோகஸ்தர், தயாரிப்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறி இருக்கிறது.

மல்டிபிளக்ஸ் அரங்குகளை இந்தியா முழுவதும் நிறுவியுள்ள PVRநிறுவனத்துக்கு சென்னையில் மட்டும் 105 திரைகளும் தமிழ்நாடு முழுக்க சுமார் 150 திரைகளும் இருக்கின்றன.

சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை, சேலம் ஆகிய விநியோகப் பகுதிகளில் இந்நிறுவனத்தின் திரையரங்குகள் இருக்கின்றன.

PVR Sathyam Cinemas | Tamil Nadu Chennai | Hospitality and Entertainment Entertainment Theatre | Bharat Directory

சென்னையின் அடையாளமாகத் திகழ்ந்த சத்யம் சினிமாஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களை PVR நிறுவனம் கையகப்படுத்தி நடத்தி வருகிறது. திரையுலகம் இப்போது அந்நிறுவனத்துக்கெதிராக பேசத் தொடங்கியிருக்கிறது.

அதற்குக் காரணம், அந்நிறுவனம் நடத்தும் திரைகளில் திரையிடும் படங்களின் மூலம் வரக்கூடிய பாக்ஸ் ஆபீஸ் வசூலில் விநியோகஸ்தர்களுக்கான பங்கு தொகை கொடுப்பதில் ஏற்படும் நீண்ட கால தாமதம்தான் காரணம் என்கின்றனர்.

இதே போன்ற நடைமுறையை அதிக வருவாய் வரக்கூடிய, முக்கியத்துவம் மிக்க தனி திரையரங்குகள் பத்தாண்டுகளுக்கு முன்பு செய்து வந்தன. அதனை விநியோகஸ்தர்கள் சங்கங்கங்கள் பஞ்சாயத்து பேசி ஒழுங்குபடுத்தினார்கள்.

ஆனால் PVR போன்ற நிறுவனங்கள் எதற்கும் கட்டுப்பட்டு வருவதாக தெரியவில்லை. ’எங்களை விட்டால் எங்கு படத்தை திரையிடுவீர்கள்?’ என எதிர் கேள்வி கேட்டு தயாரிப்பாளர், விநியோகஸ்தர் இருவரையும் அச்சுறுத்தி வருகிறது என்கின்றனர்.

PVR ல் புதிய படங்களை திரையிடும் விநியோகஸ்தர்களுக்கான பங்குத் தொகையை கொடுக்க சுமார் மூன்று மாதங்கள் எடுத்துக் கொள்கிறது அந்நிறுவனம். மாதத்தின் முதல் நாள் திரையிடப்படும் ஒரு படம் ஒரு மாதம் அல்லது ஐம்பது நாட்கள் திரையரங்கில் ஓடுகிறது.

அப்படம் ஓடி முடித்த பின்பு மொத்தமாக எவ்வளவு வசூல் அதில் விநியோகஸ்தரின் பங்கு எவ்வளவு என்பதைப் பிரித்து எழுதிக் கணக்குப் போட்டு தகவல் கூறிவிடுகின்றனர்.

அதன் பின்பு நிர்வாக நடைமுறை, காசோலை தயாரிப்பு, தலைமை அலுவலக அனுமதி என காரணம் கூறி இரண்டு வாரம் கழித்துப் பணம் கொடுத்து வந்தவர்கள் தற்போது அந்தக் கால எல்லையை நீட்டித்து இப்போது மூன்று மாதங்கள் கடந்த பின்னரே பங்கு தொகையை வழங்க தொடங்கியுள்ளனர்.

அதாவது படம் வெளியிட்ட பின் விநியோகஸ்தரின் பங்கு அவரிடம் சென்று சேர சுமார் ஐந்து மாதங்கள் ஆகின்றன என்கிறார்கள்.

அதேசமயம் தனித் திரையரங்கு முதலாளிகள் படம் போடுவதற்கு முன்பணம் கொடுக்கிறார்கள். படம் ஓடி முடிந்ததும் உடனே கணக்குக் கொடுத்துப் பணமும் கொடுத்து விடுகிறார்கள். ஆனால் PVRபோன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் திரையிடும் எந்தப் படத்துக்கும் முன்பணம் கொடுப்பதில்லை.வருகிற வசூலையும் சுமார் ஐந்து மாத காலம் பயன்படுத்திக் கொள்கிறது.

வட்டிக்கு வாங்கி தொழில் செய்யும் விநியோகஸ்தரும் தயாரிப்பாளரும் இந்த ஐந்து மாதத்துக்கும் சேர்த்து வட்டி கட்ட வேண்டிய கொடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 27) சென்னையில் நடந்த நடப்பு விநியோகஸ்தர்கள் சங்க பொதுக்குழுவில் பிவிஆர் நிறுவனத்தின் இச்செயலுக்கு எதிராக போர்க்குரல்கள் எழுந்துள்ளன.

’தனித் திரையரங்குகளை அழித்து உருவாகும் இதுபோன்ற நிறுவனங்களை ஆதரித்த முன்னணி தயாரிப்பாளர்கள் இருப்பதை அழித்து பறக்க ஆசைப்பட்டதற்கான பலனை இப்போது அனுபவிக்கின்றோம்’ என்கின்றனர்.

இருந்தபோதிலும் PVR நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான தீர்வு காண பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

சரக்கு வேனில் மக்களை ஏற்றினால் கடும் நடவடிக்கை… ‘வாழை’ படத்தின் எதிரொலியா? நடந்தது என்ன?

ஓய்வு பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் கொலை… மதிமுக மாவட்ட செயலாளர் கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share