உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூலை 26) சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
2018ஆம் ஆண்டு பாஜக தலைவராக இருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக, ராகுல் காந்திக்கு எதிராக பாஜகவைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா உத்தரப் பிரதேசம் மாநிலம் சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதேசமயம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ராகுல் காந்தி இன்று(ஜூலை 26) ஆஜராஜ நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பேரில் ராகுல் காந்தி சுல்தான்பூர் நீதிமன்றத்துக்கு இன்று வருகைத்தந்தார்.
அப்போது காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டு ராகுல் சென்ற கார் மீது பூக்களை வீசி ஆதரவை தெரிவித்தனர்.
ராகுல் காந்தியின் வருகையால் நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
இதையடுத்து நீதிபதி சுபம் வெர்மா முன் ஆஜரான ராகுல் காந்தி, தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். தொடர்ந்து வழக்கை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். பின்னர் நீதிமன்றத்திலிருந்து ராகுல் காந்தி கிளம்பினார்.
இந்த வழக்கு குறித்து மனுதாரர் வழக்கறிஞர் சந்தோஷ் குமார் பாண்டே, “தனது நற்பெயரை கெடுக்கும் நோக்கிலும் அரசியல் காரணத்துக்காகவும் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறி ராகுல் காந்தி தன் மீதான புகாரை மறுத்தார். இனி நாங்கள் அவர் அவதூறாக பேசியதற்கான ஆதாரத்தை சமர்ப்பிப்போம்” என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அக்னிபத் திட்டத்தை அரசியல் ஆக்குகின்றனர்: கார்கிலில் மோடி பேச்சு!