தேர்தல் சமயத்தில் சமூக வலைதளங்களில் டீப் ஃபேக் வீடியோ பரப்பப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளது.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்தி நடிகர் அமீர்கான் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவாகப் பேசும் ‘டீப் பேக்’ வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.
நடிகர் ரன்வீர் சிங் பாஜக அரசை விமர்சித்துப் பேசும் ‘டீப் பேக்’ வீடியோவும் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரது டீப் பேக் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவின.
இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
“அரசியல் பிரச்சாரத்தில் டீப்ஃ பேக் தொழில்நுட்பங்களைப் பரவலாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஜனநாயக நெருக்கடியைத் தீர்ப்பதற்குத் தேர்தல் ஆணையத்துக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று வழக்கறிஞர்கள் குரல் என்ற அமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு இன்று (மே 2) தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் பிரீதம் சிங் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “மக்களவைத் தேர்தல் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு மத்தியில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இந்த விவகாரத்தை நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் விட்டுவிடுகிறோம். தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இருக்கிறது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மே 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் முடிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் ஒரு மனு தாக்கல் செய்யவும் மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வெயிலை விட மோடியின் கொள்கைதான் மக்களை சுட்டெரிக்கிறது! – கார்கே