பொதுத்துறை ஊழியர்களுக்கு 25%போனஸ் வழங்குக: ராமதாஸ்

Published On:

| By Balaji

பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 25% தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா, மழைக்கு மத்தியிலும் தீபாவளியைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுவதற்கு இன்னும் இரு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் பல்வேறு நிறுவனங்களும் போனஸ் அறிவித்து வருகின்றனர். ஆனால், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், மின்சார வாரியம் உள்ளிட்ட தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு இன்னும் ஊக்கத்தொகை மற்றும் முன்பணம் வழங்கப்படவில்லை.

இதனால் அவர்களுக்கு 25 சதவிகித போனஸ் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசுக்குச் சொந்தமாக 70க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியைக் கொண்டாடுவதற்காக ஊக்கத்தொகையும், முன்பணமும் வழங்கப்படுவது வழக்கம்.

கடந்த காலங்களில் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கான ஊக்கத்தொகை குறித்து பொதுத்துறை நிறுவன அதிகாரிகளுக்கும், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் முன்னிலையில் ஜனநாயக முறைப்படி பேச்சுக்கள் நடத்தப்படும். அதில் இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஊக்கத்தொகையின் அளவு தீர்மானிக்கப்படும்.

ADVERTISEMENT

ஆனால், கடந்த சில ஆண்டுகளாகப் பேச்சு நடத்தும் வழக்கம் கைவிடப்பட்டு, அரசே தன்னிச்சையாக ஊக்கத்தொகையை அறிவித்து வருகிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக 20% அல்லது அதற்கும் குறைவான அளவில் தான் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் கொரோனா நெருக்கடியைக் காரணம் காட்டி ஊக்கத்தொகை அளவு 10% ஆக குறைக்கப்பட்டது. நடப்பாண்டில் ஊக்கத்தொகை குறித்த அறிவிப்பே வெளியாகவில்லை.

ஊக்கத்தொகை தாமதப்படுத்தப்பட்டு, தீபாவளி நெருக்கத்தில் வழங்கப்பட்டால் அவர்களின் குடும்பங்களால் திருநாளுக்குத் தயாராக முடியாது. அதுமட்டுமின்றி தீபாவளிக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக பணியாளர்கள் விடுப்பு எடுத்தால் அது பணியைப் பாதிக்கக்கூடும். இவற்றைக் கருத்தில் கொண்டு பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கான ஊக்கத் தொகையை உடனடியாக அறிவித்து, அதையும், முன்பணத்தையும் நடப்பு வாரத்திற்குள்ளாக அனைவருக்கும் வழங்குவதற்குத் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களுக்குக் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக 20% ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படுவதால், நடப்பாண்டில் அதை 25% ஆக உயர்த்தி வழங்கவும் அரசு முன்வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share