ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்காகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாகத் தெரிவித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதன் விவரங்களையும் கூறியுள்ளார்.
ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்குப் போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளவிருக்கும் கூடுதல் சிறப்பு ஏற்பாடுகள் குறித்த இரண்டாவது ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (அக்டோபர் 1) நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், “தீபாவளி பண்டிகைக்காகச் சென்னையிலிருந்து ஐந்து இடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திரா மார்க்கமாகப் பேருந்துகள் இயக்கப்படும். கே.கே.நகரிலிருந்து கிழக்கு கடற்கரை வழியாகப் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கும், திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லக் கூடிய பேருந்துகள் மெப்ஸ் பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்படும். திண்டிவனம், வந்தவாசி, செஞ்சி மார்க்கமாகச் செல்லக்கூடிய பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து ஆற்காடு, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்குப் பேருந்துகள் இயக்கப்படும்.

திருநெல்வேலி, செங்கோட்டை, திருச்சி, கோவை, மதுரை, திருப்பூர், ஈரோடு, உதகை ஆகிய தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்லக் கூடிய பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
தீபாவளிக்காக வரும் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு 10,940 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதேபோல் பிற ஊர்களிலிருந்து 8,310 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோன்று, ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் சென்றுவர ஏதுவாக 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை 6,145 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.
திருப்பூரிலிருந்து பிற ஊர்களுக்கு 280 பேருந்துகளும், கோயம்புத்தூரிலிருந்து பிற ஊர்களுக்கு 717 பேருந்துகளும், பெங்களூரிலிருந்து பிற ஊர்களுக்கு 245 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறப்புப் பேருந்துகளுக்கு முன்பதிவு செய்ய சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 மையங்களும், தாம்பரம் சானிடோரியத்தில் இரண்டு மையங்களும், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் ஒரு மையம், மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் ஒரு மையம் என மொத்தம் 30 மையங்கள் திறக்கப்பட இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tnstc.com, www.redbus.in, www.paytm.com, www.busindia.com போன்ற இணையதளங்கள் மூலமாகவும் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.�,