ஆசிரியர்களின் ஊதியம் பிடித்தம்… கொந்தளிக்கும் தலைவர்கள்!

Published On:

| By Kavi

போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

அதேசமயம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் இல்லையென்றால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் கடந்த 35 நாள்களாக போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை தமிழக அரசு பிடித்தம் செய்திருக்கிறது. சுமார் 80 சதவிகிதம் வரை பிடிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

ADVERTISEMENT

இந்தநிலையில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,

ADVERTISEMENT

“2009- மே மாதம் 31-ஆம் நாள் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1-ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 ஊதிய முரண்பாடு நிலவுகிறது.

இதனால் 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை குறைவான ஊதியம் தான் கிடைக்கிறது. இந்த அநீதியை இழைத்த திமுக அரசே இந்த அநீதியைப் போக்க வேண்டும் என்று வலியுறுத்தி தான் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆசிரியர்களுக்கு நீதி வழங்கும் எண்ணம் திமுக அரசுக்கு இருந்திருந்தால், ஆட்சிக்கு வந்த ஐந்தாண்டுகளில் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றியிருக்க வேண்டும். அவ்வாறு நிறைவேற்றியிருந்தால் அவர்கள் போராட வேண்டியிருந்திருக்காது.

அவர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்ய வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்காது. இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு காரணமே திமுக அரசு தான் எனும் போது ஆசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்வது செய்யாத தவறுக்கு இரட்டை தண்டனை வழங்குவதற்கு ஒப்பானது ஆகும்.

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும் என்று வாக்குறுதி (எண். 311) அளித்த திமுக, ‘’பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராடிய ஆசிரியர்கள் மீது 17பி பிரிவின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்ட ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வு முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்குக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு, ஆசிரியர்களுக்குப் பாதிப்பிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைத்திட ஆவன செய்யப்படும் (வாக்குறுதி எண் – 312)” என்ற வாக்குறுதியையும் அளித்தது. பழிவாங்கலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக வாக்குறுதி அளித்த திமுக அரசு, இப்போது ஆசிரியர்களை பழிவாங்கத் துடிப்பது என்ன நியாயம்?

அறிவுசார் சமூகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை போராட வைப்பதும், போராடியதற்காக தண்டிப்பதும் ஏற்க முடியாதவை. எனவே, 35-ஆம் நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுவதுடன், அவர்கள்இடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தையும் உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஜனவரி மாத ஊதியத்தை வழங்காமல், மேலும் அவர்களுக்கு அநீதி இழைத்திருக்கிறது திமுக அரசு. முதலமைச்சர் ஸ்டாலின்  அரசின் நிர்வாகத் தவறுகளுக்காக, ஆசிரியப் பெருமக்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு.

தமிழகத்தில், குற்றவாளிகள் எந்த பயமுமின்றி கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு.

பொதுமக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை, ஊழல் திமுக அரசு புரிந்து கொள்ள வேண்டும். உடனடியாக, ஆசிரியர்களுக்கு, ஜனவரி மாத ஊதியத்தை முழுமையாக வழங்குவதோடு, சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share