உட்கட்சி பிரச்சினையை திசை திருப்ப நம்பிக்கையில்லா தீர்மானமா? – ஸ்டாலின் கேள்வி!

Published On:

| By Kavi

உட்கட்சி பிரச்சினையை திசை திருப்ப சபாநாயகர் மீது அதிமுகவினர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். decision to divert attention from admk internal party issue

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தார்.

ஆனால், இந்த தீர்மானம் தோல்வியடைந்தது.

சபாநாயகரின் நடுநிலை!

சபாநாயகர் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் குறித்து அவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “2017 ஆம் ஆண்டு என்னால் இது போன்ற ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதை எண்ணி நான் வருந்தினேன் என்று எனது உரையில் நான் பதிவு செய்திருக்கிறேன்.

ஆனால், இத்தீர்மானம் இன்றைக்கு கொண்டு வரப்பட்டதன் மூலம், அன்றைய பேரவை தலைவர் ஜனநாயகத்தை மதியாது நடந்து கொண்ட முறைகளைப் பற்றி, இங்கே உள்ள பேரவை முன்னவர் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்களுக்கும், ஏன் எதிர்க்கட்சித் தலைவருக்கும் கூட நன்றாக தெரியும்.

மீண்டும் அதை சொல்ல விரும்பவில்லை. ஆனால், அவற்றோடு ஒப்பீடு செய்து தற்போதைய பேரவை தலைவர் எப்படி நடுநிலையோடு செயல்படுகிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்ளும் வாய்ப்பாக இந்த விவாதத்தை கருதுகிறேன்.

2005 – 2011 காலகட்டத்தில் தற்போதைய பேரவை தலைவர், இந்த சட்டப்பேரவையில் உறுப்பினராக இருந்தார்.

அப்போது நான் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் தறை அமைச்சராக பணியாற்றினேன். அன்று முதல் இவரை எனக்கு நன்றாக தெரியும்.

அவர் ஜனநாயக கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். மற்றவர்கள் மனம் வருந்தாத வகையில் தன்னுடைய நடத்தைகளை அமைத்துக் கொள்வார்.

நேர்மையான கருத்துக்களை ஆணித்தரமாக முன் வைக்க கூடியவர். அனைவருடனும் சிரித்து மகிழக்கூடிய அவரது பாங்கும் நேர்மையும் தான் என்னை கவர்ந்தது. அதனால்தான் அவரை இந்த பதவிக்கு நான் முன்மொழிந்தேன்.

அப்பாவு, கனிவானவர் அதே நேரத்தில் கண்டிப்பானவர்.

இவை இரண்டும் பேரவைக்கு தேவை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இவை இல்லாவிட்டால் அவையை கண்ணியத்தோடு கட்டுப்பாட்டோடு நடத்த முடியாது.

இந்த அவையில் என்னுடைய தலையீடோ, அமைச்சர்களின் தலையீடோ பேரவை நடவடிக்கைகளில் இல்லாத வகையில் தான் சபாநாயகர் நடந்து கொண்டு வருகிறார்.

கடந்த காலங்களில் நடந்தது போல் அல்லாமல், ஜனநாயக அமைப்பின் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றே என்று நினைத்து செயலாற்றி வருகிறார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமும் பாசமும் பற்றும் கொண்டு செயல்படக்கூடியவர்.

பேரவை தலைவர் அருகில் வந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அன்போடு பேசுவதை இந்த பேரவை பார்த்து இருக்கிறது.

எதிர்க்கட்சி உறுப்பினர் கண் ஜாடையால் பேசி கூட நான் பார்த்திருக்கிறேன்.

23.3.2017 அன்று நான் இந்த அவையில் பேசியதை எண்ணிப்ப்பார்க்கிறேன். எத்தனை விதி மீறல். மரபுகளில் இருந்து விலகுதல் ஆகியவற்றை நான் சுட்டிக்காட்டியுள்ளேன். நினைத்துப் பார்த்தாலே நெஞ்சம் சுடுகிறது. அதுபோலவா இன்று நடக்கிறது” என்றார். 

அதிமுகவுக்கே அதிக நேரம்

மேலும் அவர்,  “அப்பாவு மீதான அதிமுகவினரின் தீர்மானம் மீதான விவாதத்தில் சில உண்மைக்கு மாறான  செய்திகள் உள்ள காரணத்தால் அதை மறுத்து விளக்கத்தை எடுத்து வைத்து பேரவை தலைவரின் நடுநிலையை பறைசாற்ற வேண்டிய கட்டுப்பாடு, கடமை, பொறுப்பு முதலமைச்சருக்கு உள்ளது.  

அவைக்கு ஒவ்வாத வார்த்தைகளாக அன்று பயன்படுத்தப்பட்ட பல சொற்கள், அதாவது அருகதை, தகுதி, என்ன யோக்கியதை இருக்கிறது என்று திமுக உறுப்பினர்களை பார்த்து பேசப்பட்ட வார்த்தைகள், இன்று பேசப்பட்டால் அந்த வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன. 

அன்றைக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் பேசினால், அவைக்குறிப்பில் இடம்பெறும். திமுகவினர் பேசினால் நீக்கப்படும் என்ற நிலை இருந்தது. ஆனால், இன்றைய பேரவைத் தலைவர் அப்படியா நடந்து கொள்கிறார். 

இங்கே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டு கொண்டிருந்தால், அவர்களை அமைதிப்படுத்தி அமர வைக்கத்தான் பேரவைத் தலைவர் முயல்வாரே தவிர முந்தைய காலங்களில் நாங்கள் வெளியேற்றம் செய்யப்பட்டதைப் போல அவர்களை வெளியேற்றம் செய்ய நினைத்தது கிடையாது.  

கடந்த 10.1.2025 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றினார். மதியம் 1.40 மணிக்கு தொடங்கி 4.32 மணிக்குதான் முடித்தார். 2.52 மணி நேரம் பேசியிருக்கிறார். அமைச்சர்களின் குறுக்கீடுகள் ஒரு மணி நேரம். 

எதிர்க்கட்சித் தலைவர் பேசியது மட்டும் 1.52 மணி நேரம். 

அதிமுகவினர் உரையாற்றுகையில் அமைச்சர்கள் பதிலளிக்க எழுந்தால், உரையை முடித்த பிறகு பதிலளிக்கலாம் என்று அமரவைத்திருக்கிறார். அதே நேரத்தில்  எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் எழுந்தால் உடன் அனுமதி அளித்திருக்கிறார். திமுக உறுப்பினர்களை காட்டிலும் அதிமுக  உறுப்பினர்கள் பேச அதிக நேரம் கொடுத்திருக்கிறார் ” என்றார். 

தொடர்ந்து பேசிய ஸ்டாலின்,  “இந்த அரசு மீது குற்றம் குறை கூற வாய்ப்பு இல்லாத காரணத்தால் இப்படி ஒரு தீர்மானமா? உட்கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பதை திசைதிருப்ப இந்த தீர்மானமா? என்று வெளியில் விவாதம் நடக்கிறது.

அதிமுக ஆட்சியில் அவைத் தலைவர்கள் நடந்துகொண்டது போல் தற்போதையை பேரவைத் தலைவர் அப்பாவு நடந்துகொள்வதில்லை. அரசு மீது குற்றம், குறை கூற முடியாதவர்கள், இவ்வாறு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். ஆனால், இப்படி ஒருவர் மீது ஒரு தீர்மானம் கொண்டு வந்தோமே  என எதிர்காலத்தில் உங்கள் மனசாட்சி உறுத்தும். இது பேரவைத் தலைவர் மீது எய்தப்பட்ட அம்பாகவே கருதுகிறோம்.  இந்த அம்பை, இந்த அவை ஏற்காது” என்று கூறினார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share