uகிறிஸ்துமஸுக்குப் போட்டிப்போடும் படங்கள்!

Published On:

| By Balaji

ஆண்டின் இறுதி வாரம் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு விசேஷமானது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையைக் குறிவைத்து திரைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. எதிர் வரும் டிசம்பர் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை, 10 படங்கள் வரை வெளியீடு என அறிவிப்புகள் வெளிவந்திருந்தாலும் திரையரங்குகள் தரப்பில் இரண்டு நேரடி தமிழ்ப்படங்களை வெளியிடவே ஆர்வம் காட்டுகின்றனர்

அறிமுக இயக்குநர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ரைட்டர்’. இயக்குநர் ரஞ்சித் இந்தப் படத்தை தயாரிக்க, கோவிந்த வசந்தா இசையமைத்துள்ளார். அதிகாரம்மிக்க காவல் துறையில் பணிபுரியும் ரைட்டருக்கு ஏற்படும் வலியையும், அழுத்தத்தையும், அவமானங்களையும் சொல்ல வருகிறது ரைட்டர்

இரண்டாவதாக தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக ஒரு வெற்றிக்காக காத்திருக்கிறார் நந்தா பெரியசாமி. இவர் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இயக்கியுள்ள படம் ஆனந்தம் விளையாடும் வீடு. இந்தப் படத்தில் இதில் கௌதம் கார்த்திக், சேரன், பருத்தி வீரன் சரவணன், சிவாத்மிகா, வெண்பா, சௌந்தரராஜா, ஸ்ரீபிரியங்கா சிந்துஜா, சுபா, முனீஷ், மௌனிகா, விக்னேஷ் உள்ளிட்ட 41 நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் அழிந்துவரும் கூட்டு குடும்ப வாழ்க்கை, அதன் மேன்மையைக் கூறும் படமாக இந்தப் படம் இருக்கும் என்கிறார் தயாரிப்பாளர் ரங்கநாதன்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பாரதிராஜாவுடன் தரமணி பட நாயகன் வசந்த் ரவி நடித்துள்ள படம் ராக்கி. இவர்களுடன் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனா ரவி, ரோகிணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, தர்புகா சிவா இசையமைத்துள்ளார். ஆர்.ஏ ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் மனோஜ்குமார் தயாரித்துள்ளார். இந்தப் படம் மட்டும் டிசம்பர் 23ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

பலமுறை வெளியீட்டு தேதிகள் அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘தள்ளிப் போகாதே’ படம், இந்த முறை உறுதியாக வெளியாகிவிடும் எனத் தயாரிப்பாளரும் இயக்குநருமான கண்ணன் கூறியுள்ளார். இந்தப் படம் தெலுங்கில் நானி நடித்து சூப்பர் ஹிட்டான ‘நின்னு கோரி’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளராக கோபி சுந்தர், பாடல்கள் மற்றும் வசனத்தை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார்

இந்தப் படங்கள் தவிர தெலுங்கில் தயாராகியுள்ள நானி மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள ஷியாம் சிங்கா ராய் மற்றும் இந்தியில் தயாராகியுள்ள கிரிக்கெட் வீரர் கபில் தேவ் வாழ்க்கை வரலாறு பற்றிய ‘83’ படத்தைத் தமிழ்நாட்டில் நடிகர் கமல்ஹாசன் வெளியிடுகிறார். இவை இரண்டும் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாட்டில் வெளியிடப்பட உள்ளது. இருந்தபோதிலும் ஆனந்தம் விளையாடும் வீடு, ரைட்டர் இந்த இரண்டு படங்களுக்கு மட்டும் அதிகமான திரையரங்குகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த வாரம் வெளியான புஷ்பா திரைப்படம் பெரும்பான்மையான தியேட்டர்களில் தூக்கப்பட்டுவிடும், ஸ்பைடர் மேன் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர்களில் இரண்டாவது வாரமும் தொடரும் என்கின்றனர்

ஆண்டின் இறுதியில் கௌதம் கார்த்திக், இயக்குநர் சேரன் (ஆனந்தம் விளையாடும் வீடு), அதர்வா (தள்ளிப்போகாதே), பாரதிராஜா (ராக்கி), சமுத்திரக்கனி (ரைட்டர்) என இரண்டு வளர்ந்து வரும் நடிகர்களும், தமிழின் மிகச்சிறந்த இயக்குநர்களான பாரதிராஜா, சேரன், சமுத்திரக்கனி இவர்கள் நடித்திருக்கும் படங்கள் ஒரே நாளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

நான்கு படங்களில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு சுமார் 40 கோடி ரூபாய், இதில் 24 கோடி ரூபாய் தமிழ்நாடு திரையரங்குகளில் வசூல் ஆக வேண்டும். அதனால் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் தயாரிப்பாளர்கள் உள்ளனர்.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share