நீட் தேர்வு குறித்து விவாதிக்க கேட்டு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
கடந்த மே 5ஆம் தேதி நடந்த நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக நாடு முழுவதும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து இரு அவையிலும் விவாதிக்க வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வர நேற்று (ஜூன் 27) காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் முடிவெடுத்தனர்.
அதன்படி இன்று (ஜூன் 28) மக்களவை கூடியதும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சபாநாயகர் ஓம்.பிர்லாவிடம், நீட் தேர்வு காரணமாக பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து அவையில் ஆரோக்கியமான விவாதம் நடத்தப்பட வேண்டும். இளைஞர்களின் நலன் கருதி பிரதமர் விவாதம் நடத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
ஆனால் இதற்கு சபாநாயகர் ஓம்.பிர்லா மறுப்புத் தெரிவித்தார். இதனால் இந்தியா கூட்டணி கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். நீட் தேர்வு குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர். எனினும் இதற்கு மறுப்புத் தெரிவித்த ஓம்.பிர்லா, அவையை வரும் ஜூலை 1ஆம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைத்தார்.
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதிக்க பாஜக எம்.பி. திரிவேதி எழுந்தார்
அப்போது மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நீட் தேர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கை மறுக்கப்பட்டதால் இந்தியா கூட்டணி கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். நீட் தேர்வுக்கு எதிராக முழக்கமிட்டு கொண்டிருந்த போது காங்கிரஸ் எம்.பி.பூலே தேவி மயக்கமடைந்தார்.
அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையே பிஜு ஜனதா தளம் கட்சி எம்பிக்கள் மத்திய அரசை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து மாநிலங்களவையும் ஜூலை 1ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே நீட் உள்ளிட்ட தீவிரமான விஷயங்கள் குறித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசும் போது மைக் ஆஃப் செய்யப்படுவதாக இந்தியா கூட்டணி கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
“இவ்வளவு தீவிரமான பிரச்னை குறித்து பேசும்போது மைக்கை அணைப்பது போன்ற அற்ப செயல்களை செய்து இளைஞர்களின் குரலை நசுக்க சதி நடக்கிறது” என்று காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
காங்கிரஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், மைக் ஆப் செய்யப்படுவது குறித்து ராகுல் காந்தி சபாநாயகரிடம் கூறுகிறார். அதற்கு அவர் மைக்கை இயக்கும் சுவிட்ச் இங்கு இல்லை என கூறி குடியரசுத் தலைவரின் உரை மீதே விவாதம் நடத்தப்பட வேண்டும் என்கிறார். தொடர்ந்து ராகுல் பேசிக்கொண்டிருக்கும் போது மைக் ஆப் செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சிதிலமடைந்த குடியிருப்புகள் சீரமைக்கப்படும்: பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு!
ஐந்து மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார் ஹேமந்த் சோரன்