காதல் அட்வைஸ் சொல்லும் ‘டியர் ரதி’

Published On:

| By Minnambalam Desk

Dear Radhi Tamil Movie 2026

ஒரு காலத்தில் மணிமேகலைப் பிரசுரம், நீச்சல் கற்றுக் கொள்வது எப்படி? தேர்வில் பாஸ் ஆவது எப்படி? கண்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி? என்று.. ஒரு கட்டுரை அல்ல… தலைக்கு ஒரு புத்தகமே போடுவார்கள். அவை பிய்த்துக் கொண்டு போகும். எப்படி என்று கேட்பது எப்படி என்ற புத்தகம்தான் அவர்கள் போடாமல் விட்ட ஒரே எப்படி.

கவிஞர் வாலி, ”சக்கரை வள்ளிக் கிழங்கு சமைஞ்சது எப்படி?” என்று ராகமாகக் கேட்க,

ADVERTISEMENT

அட என்று ஆச்சர்யப்படும்படியாகவும் ஒரு ‘எப்படி’ படம் வந்தது.

அதுதான் காதலில் சொதப்புவது எப்படி?

ADVERTISEMENT

இந்த நிலையில் காதலைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி என்று சொல்ல ஒரு படம் வருகிறது. ‘டியர் ரதி’ !

படத்தின் நாயகனாக அறிமுகமாகும் சரவண விக்ரம். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நடித்தவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் 84 நாட்கள் இருந்தவர். நாயகியாக ஹஸ்லி அமான் நடித்துள்ளார். மலையாளத்தில் கதிர் நாயகனாக நடித்த ‘மீஷா’ படத்தில் நடித்த இவர், இப்படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.

ADVERTISEMENT

படத்தின் கதை பற்றி இயக்குநர் பேசும்போது,”இன்றைய சூழலில் ஆணோ பெண்ணோ தனக்கு விருப்பமான ஒத்த அலை வரிசை மனம் கொண்ட எதிர்பாலின நட்பைத் தேடினால் அடைவது சுலபம். அந்த நட்பு காதலாவது கடினம். ஆனால் அதைத் தக்க வைத்துக் கொள்வது மிகக் கடினம்.

பெண்களிடம் பேசத் தயங்கும் ஓர் வாலிபன் ஸ்பா போன்ற ஓர் அழகு நிலையத்தில் ஒரு பெண்ணைச் சந்தித்து ‘டேட்டிங்’கிற்காக வெளியே அழைத்துச் செல்கிறான்.(அம்மாடி…. இதுதான் காதலா?)

அதே நாளில் அந்தப் பெண்ணைத் தேடி போலீஸ் ஒரு பக்கம், ரவுடிக் கும்பல் ஒரு பக்கம் எனத் துரத்துகிறார்கள்.வெளியே சென்றவர்கள் பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார்கள்.

அது என்ன மாதிரியான பிரச்சினை ?அதை எப்படி எதிர்கொண்டார்கள்? என்பதுதான் ‘டியர் ரதி’ படத்தின் கதை.

இன்றைய தலைமுறையினர் காதல் இணையைத் தக்க வைத்துக் கொள்ள எப்படி எல்லாம் போராடுகிறார்கள்? அவர்கள் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகள், சிக்கல்கள் என்ன? அதைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? என்பதைச் சொல்லும் வகையில் ‘ரொமான்டிக் காமெடி’யாக இந்த ‘டியர் ரதி’ திரைப்படம் உருவாகி இருக்கிறது ” என்கிறார்.

(டியர் ரதி என்று பெயர் .. பியூட்டி பார்லரில் பார்த்த பெண்ணை டேட்டிங் அழைத்துச் செல்வது … இதெல்லாம் பார்க்கும்போது இதற்கும், காதலை தக்கவைத்துக் கொள்வதற்கும் என்ன சம்மந்தம் இருக்கப் போகிறது என்றே கேள்வி எழுகிறது.)

வில்லனாக நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரன் ,நடிப்புப் பயிற்சிக் கல்லூரியில் படித்தது மட்டுமல்லாமல் பலருக்கும் நடிப்புப் பயிற்சி அளித்து வருபவர். ‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பாத்திரத்திற்கான உடல் மொழியை வடிவமைத்தவர் இவர்தான்.

படத்தை பார்க்கிற மாதிரி கண்ணியமா வடிவமைத்து இருக்காங்களான்னு பாத்தீங்களா சார்…

— ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share