தமிழ் தொலைக்காட்சி உலகில் குறிப்பிடத்தக்க தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி என்றழைக்கப்படுகிற திவ்யதர்ஷினி. ‘காபி வித் டிடி’ உட்படப் பல நிகழ்ச்சிகளை இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கியிருக்கிறார். நளதமயந்தி, விசில் படங்களில் தனது திரை வாழ்வைத் தொடங்கிய டிடி, தனுஷ் இயக்கிய ‘பவர் பாண்டி’, சுந்தர்.சியின் ‘காபி வித் காதல்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். dd gives perfect meaning of masculinity
மலையாளத் தொலைக்காட்சி உலகில் பிரபலமான தொகுப்பாளினியாக விளங்குபவர் பார்லி மானே. தமிழில் அஜித்குமார் உடன் ‘வலிமை’ படத்தில் நடித்திருக்கிறார்.
இவர் யூடியூபில் ’பார்லி மானே ஷோ’ என்ற நிகழ்ச்சியை மலையாளத்தில் நடத்தி வருகிறார். அதில் பிரபலங்களைப் பேட்டி கண்டு வருகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் டிடி விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இரண்டு தொகுப்பாளினிகள் பரஸ்பரம் புகழ்ந்து கொள்வது, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது என்பதைத் தாண்டி வேறு சில விஷயங்களும் இதில் அலசப்பட்டன.
’உண்மையில் ஆண்மைமிக்க துணை எப்படி இருப்பார்’ என்ற பார்லி மானேவின் கேள்விக்கு, “பத்து வருஷத்துக்கு முன்னாடி இந்த கேள்வி கேட்டிருந்தால் பதில் இப்படித்தான் இருந்திருக்கும். உயரமா, பைக்ல போற, ஹீரோ மாதிரி சண்டை போடுற ஒருத்தரைத்தான் ஆண்மை மிக்கவர்னு சொல்லியிருப்போம்.
ஆனால், ஒருகட்டத்துல உண்மையான ஆண்மைன்னா என்னன்னு நமக்கு தெரிய வரும். பெண்கள் வீடு திரும்புறப்போ, இன்னிக்கு உன்னோட நாள் எப்படி இருந்ததுன்னு கேட்கறவரா அந்த ஆண் இருக்கணும். பெண் டயர்டா இருக்கறதை பார்த்து காலைப் பிடிச்சு மசாஜ் பண்றவரா, அவங்களை ரிலாக்ஸ் ஆக வைக்கிறவரா, கிச்சன்ல உதவி செய்றவரா இருந்தா, அவர்தான் ஆண்மைக்க ஆண்..” என்று சொன்ன டிடி, ‘அது எல்லா ஆண்களாலயும் செய்ய முடிகிற ஈஸியான விஷயம் இல்ல’ என்றார்.
“ஒரு பெண்ணுக்கு ஒரு பிரச்சனை எனும்போது, அதை மாத்தறதுக்கு தயாரா இருக்கறவரா அந்த ஆண் இருக்கணும். இப்போ இருக்குற இளம்பெண்கள் இதைத் தெரிஞ்சுக்கணும். இன்னும் ‘ஆண்கள்னா இப்படித்தான் இருக்கணும்’னு பழைய விஷயங்களை ‘பாலோ’ பண்ணாம, அவங்க வாழ்க்கைக்குத் தேவையான ஆணைத் தேடிக் கண்டுபிடிக்கணும்” என்று பார்லி மானே நிகழ்ச்சியில் தெரிவித்திருக்கிறார் டிடி.
