தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கு : நீதிமன்றத்தில் எடப்பாடி ஆஜர்!

Published On:

| By Kavi

திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த குற்றவியல் அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 14) எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களவை தேர்தலை முன்னிட்டு, கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி மத்திய சென்னை தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து புரசைவாக்கம் டாணா தெருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை விமர்சித்து பேசிய அவர், திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற மேம்பாட்டு உறுப்பினர் நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை எண்ணி பாருங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் பேச்சை எதிர்த்து தயாநிதி மாறன் எழும்பூர் 13ஆவது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், “எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். ஆதாரமே இல்லாமல் பேசியுள்ளார். அப்படி பேசியதற்கு 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தேன். ஆனால் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. அதனால்  கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன்” என்று கூறியிருந்தார்.

மேலும்,  “மத்திய சென்னை தொகுதி நிதியாக 17 கோடி ரூபாய் என் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டது. அதைக் கொண்டு என் தொகுதிக்கு பல நலத்திட்டங்களை செய்துள்ளேன்.  ரூ. 17 கோடியில் ரூ. 17 லட்சம் தான் மீதம் உள்ளது. 95 சதவீதத்திற்கு மேல் நல திட்டங்களுக்காக செலவு செய்துள்ளேன். எனவே அவதூறு பரப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 500ன் கீழ் அவதூறு நடவடிக்கை எடுத்து அவரை தண்டிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனு எழும்பூர் 13-வது மாஜிஸ்திரேட்டு தர்மபிரபு முன்பு இன்று (மே 14) விசாரணைக்கு வந்தது. ஈபிஎஸ் தரப்பில் வழக்கறிஞர்கள் ஐயப்ப ராஜ், ரியாஸ் அகமது ஆகியோர் ஆஜராகினர்.

முதல் விசாரணை என்பதால் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 14) நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கு ஆவணங்களை பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து  மாஜிஸ்திரேட்டு தர்மபிரபு, இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ சம்பந்தமானது. அதனால் வழக்கை எம்.பி. எம்.எல்.ஏ., மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து  உத்தரவிட்டார்.

தொடர்ந்து வழக்கு ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

யார் அடுத்த பிரதமர் என்பதை ஜெகன்மோகன் ரெட்டியும், நவீன் பட்நாயக்கும் தீர்மானிக்கப் போகிறார்களா?

பிளஸ் 1 ரிசல்ட் : கோவை முதலிடம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share