ஸ்டாலின் அழைப்பு… நவீன் பட்நாயக் கொடுத்த உறுதி!

Published On:

| By Selvam

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான கூட்டத்தில், ஒடிசா மாநில முன்னாள் முதல்வரும் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் கலந்து கொள்ள உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இன்று (மார்ச் 11) தெரிவித்தார். Dayanidhi Maran invites Odisha

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் ஏழு மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற உள்ளது.

இதற்காக ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மேற்குவங்கம், ஒடிசா, பஞ்சாப், கேரளா மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து ஸ்டாலின் கடிதம் எழுதினார். மேலும், மாநில முதல்வர்களை சந்திக்க திமுக அமைச்சர்கள் மற்றும் எம்.பி-க்கள் அடங்கிய குழுவை அமைத்தார்.

அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் ஒடிசா மாநில முன்னாள் முதல்வரும் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக்கை இன்று நேரில் சந்தித்து கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர்.

இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், “தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான கூட்டத்தில் ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் கலந்து கொள்ள அழைப்பு விடுப்பதற்காக இங்கு வந்தோம்.

இந்த விவகாரம் தொடர்பான தனது கருத்துக்களை நவீன் பட்நாயக் முன்வைத்தார். இதனால் ஏற்படும் பாதிப்புகளை அவர் எங்களிடம் பகிர்ந்து கொண்டார். கண்டிப்பாக மார்ச் 22-ஆம் தேதி நடைபெற உள்ள மீட்டிங்கில் கலந்து கொள்வதாக உறுதியளித்தார்.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மேற்குவங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் தொகுதி மறுசீரமைப்பால் தற்போது இருக்கக்கூடிய தொகுதிகளை இழக்க நேரிடும். இவை அனைத்தும் வளர்ந்த மாநிலங்கள். மக்கள் தொகை கட்டுப்பாடு கொள்கையை சரியாக பயன்படுத்தியுள்ளன” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தயாநிதி மாறன், “நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் கிடையாது. வட மாநிலங்களில் உள்ள குழந்தைகள் ஒரு மொழியை மட்டும் தான் படிக்கிறார்கள். தமிழ்நாட்டு குழந்தைகள் மட்டும் ஏன் மூன்று மொழிகளை படிக்க வேண்டும்?

அவர்கள் விரும்பினால் இந்தி, மலையாளம் என எந்த மொழி வேண்டுமானாலும் படிக்கலாம். இந்தியாவை இந்தி நாடாக மாற்ற வேண்டும் என்பது தான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கொள்கை” என்று தெரிவித்தார். Dayanidhi Maran invites Odisha

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share