தயாநிதி மாறன் வழக்கு : மனுவை வாபஸ் பெற்ற எடப்பாடி

Published On:

| By Kavi

தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனுவை எடப்பாடி பழனிசாமி திரும்ப பெற்றார்.  Dayanidhi Maran case

2024 மக்களவைத் தேர்தலின் போது, மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.

அப்போது தயாநிதி மாறன் எம்.பி. தனது தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். 

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்தார். 

ஆனால் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல . அதை எண்ணிட கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து தயாநிதி மாறன் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அதில்,  “புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நகரிக் சுரக் ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.) அமலுக்கு வரும் முன்பே இந்த அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  அதனால், அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி பி.என்.எஸ்.எஸ். சட்டத்தின் கீழ் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை ஏற்க கூடாது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (மார்ச் 11) மீண்டும் விசாரணை வந்தபோது எடப்பாடி பழனிசாமி சார்பில், தன்னை விடுவிக்கக் கோரிய மனுவை திரும்ப பெறுவதாகதெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜெயவேல் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஏப்ரல் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். Dayanidhi Maran case

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share