நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் புகழ்பெற்ற வெப் சீரீஸ்களில் முக்கியமான சீரிஸ் ‘ஸ்குவிட் கேம்’. கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான இந்த சீரிஸிற்கு இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், தற்போது இந்த சீரிஸின் ஆங்கில ரீமேக்கை ‘செவென்’ , ‘ஃபைட் கிளப்’, ‘முல்ஹோலாண்ட் டிரைவ்’ போன்ற படங்களை இயக்கிய டேவிட் ஃபின்சர் இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகிறது.
இந்த ரீமேக் சீரிஸில் நடிக்கவிருக்கும் நடிகர்கள், கதை , ரிலீஸ் தேதி குறித்த எந்த ஒரு அறிவிப்பும் அறிவிக்கப்படாத நிலையில், இந்த சீரிஸின் திரைக்கதையை ‘உட்டோப்பியா’ போன்ற சீரிஸ்களை எழுதிய டென்னிஸ் கெல்லி எழுதவுள்ளார்.
ஹ்வாங் டோங் ஹ்யுக் எழுதி இயக்கிய ‘ஸ்குவிட் கேம்’ கடந்த 2021ஆம் ஆண்டு நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதில். லீ ஜுங் ஜே, பார்க் ஹேசோ, வி ஹாஜூன், ஹொ யோன் ஜுங், ஓ யங் சு, கியொ சுங் டே, அனுபம் திரிபாதி, கிம் ஜோ ரியங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த சீரிஸின் இரண்டாவது சீசன் வருகிற டிசம்பர் 26ஆம் தேதி வெளியாகிறது. மேலும், இந்த சீரிஸின் மூன்றாவது சீசனுக்கான வேலைகளும் தொடங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
– ஷா